சேலத்தில் அரசு நியாய விலைக் கடைகளுக்கு உணவுப் பொருள்களை அனுப்பும், பருப்பு குடோனில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அரசு நியாய விலைக் கடைகளுக்கு ஐந்து நிறுவனங்கள் மூலமாக பருப்பு, பாமாயில் போன்ற உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதில், வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். சேலம், சீலநாயக்கன்பட்டி அருகே சந்தீப் என்பவருக்குச் சொந்தமான பருப்பு குடோனில் சோதனை நடத்த வருமான வரி அதிகாரிகள் இரு தினங்களுக்கு முன் வந்தபோது, அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், போலீசாரின் உதவியுடன் குடோனை நேற்று திறந்து வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவுக்கும் மேலாக அவர்களின் சோதனை நீடித்தது.