களைகட்டும் சென்னை உணவு திருவிழா... 150க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் உணவு
சென்னை தீவுத் திடலில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் 3 நாள் உணவு திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் பாரம்பரிய உணவு வகைகள் குறித்த அரங்குகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பான உணவுகள் குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுத்தும் வருகிறது
இங்கு 150க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், பாரம்பரிய நெல் வகைகள், சிறு தானிய வகைகள், ஆரோக்கிய உணவுக்கள் குறித்த அரங்குகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு, பாரம்பரிய நெல் வகைகள் தினை வகைகள் குறித்த அரங்கில், தமிழகத்தில் அழிந்து போன, அழியும் தருவாயில் உள்ள, குழியடிச்சான், தாய்லாந்து கவுணி, திடகால், சிவன் சம்பா, கருப்பு கவுணி, காட்டு யானம், கருடன் சம்பா, மாப்பிள்ளை சம்பா போன்ற அறிய வகை நெல் வகைகளின் விதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றாவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதல் ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வருகை தந்து சென்னை தீவுத்திடலில் உள்ள பல்வேறு உணவு வகைகளை உண்டும் , பாரம்பரிய நெல் வகைகளை வாங்கிச் சென்றும் வருகின்றனர்.
அழிந்து வரும் நெல் வகைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு கிடைத்துள்ள நிலையில் பெரும்பாலானோர் தேடிச்சென்று இத்தகைய நெல் வகைகளை வாங்கி செல்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ஏராளமான பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் இன்றைய விடுமுறை தினத்தை கழிக்கும் விதமாக நிறைவு நாளான இன்று உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் இனிய அரங்கமைத்து பாட்டு கச்சேரியும், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது
சிறியவர்கள் இளைஞர்கள் பெரியவர்கள் என பலரும் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தும் , பல்சுவை உணவுகளை விரும்பி உண்டு மகிழ்ந்தும் மூன்றாவது நாள் உணவுத் திருவிழாவை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.