#chicken #fish #fssai
விரைவில் அழுகக்கூடிய உணவுப் பொருட்களைச் சேமித்து, விநியோகிக்கும்போது குறிப்பிட்ட வெப்பநிலையைப் பராமரிக்க வேண்டும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், கோவா, பன்னீர், இறைச்சி மற்றும் மீன் போன்ற எளிதில் கெட்டுப்போகும் உணவுப் பொருட்கள், உரிய வெப்பநிலையில் கையாளப்படாவிட்டால் நுண்ணுயிரிகள் பெருகுவதோடு உடல்நலனுக்கும் கேடு விளைவிக்கும் என உணவு வணிக நிறுவனங்களை எச்சரித்துள்ளது. மேலும், உணவுப் போக்குவரத்துக்குச் சுத்தமான, மூடப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும், சாக்குப் பைகளுக்கு பதிலாக உணவு தரத்திலான (Food-grade) பேக்கிங் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூசி, ஈரப்பதம், பூச்சிகள் மற்றும் மாசுபடுதல் ஆகியவற்றிலிருந்து உணவுப் பொருட்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், இந்த விதிகளை மீறினால் உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்படுவதுடன், கடுமையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அனைத்து மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது