பூமியை தாக்க வரும் சோவியத் விண்கலம்... எங்கே விழும்..?

Update: 2025-05-04 17:21 GMT

50 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் யூனியன் காலத்தில் ஏவப்பட்ட விண்கலம் ஒன்று இந்த மாதம் பூமியில் எங்கு

வேண்டுமானாலும் விழலாம் என்று வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1972 ஆம் ஆண்டு வீனஸ் கிரகத்தை ஆராய்வதற்காக காஸ்மோஸ் 482 ( Kosmos 482) என்ற விண்கலத்தை சோவியத் யூனியன் விண்ணில் ஏவியது.

ஆனால் ராக்கெட்டின் பூஸ்டர் செயலிழந்ததால் போதுமான வேகத்தை பெறத் தவறியது. இதனால் 495 கிலோ எடையுள்ள விண்கலம் பூமியைச் சுற்றி ஒரு நீள்வட்ட சுற்றுப்பாதையில் கை விடப்பட்டது.

50 ஆண்டுகளுக்கு முன்னர் ஏவப்பட்ட இந்த சோவியத் விண்கலம் பூமியின் வளிமண்டலத்தில் கட்டுப்பாடற்ற மறு நுழைவுக்கு தயாராக உள்ளதாகவும், பூமியின் எந்த பகுதியிலும் விழக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மே 10 ஆம் தேதி பூமியின் வளிமண்டலத்திற்குள் விண்கலம் நுழையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில நாட்கள் முன்கூட்டியோ அல்லது தாமதமோ ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீனஸின் வளிமண்டலத்தின் கடுமையான அழுத்தம் மற்றும் வெப்பத்தைத் தாங்கும் வகையில் லேண்டர் கட்டமைக்கப்பட்டது என்பதால், அது மீண்டும் நுழைந்து பூமியை அப்படியே அடையக்கூடும் என்று டச்சு செயற்கைக்கோள் கண்காணிப்பாளர் மார்கோ லாங்ப்ரூக் Marco Langbroek கூறியுள்ளார்.

அவ்வாறு விண்கலம் பூமியின் மீது மோதினால் அதன் தாக்கம், விண்கல்லின் அபாயம் போல் இருக்கும் என ஒப்பிடுகிறார்.

டெல்ஃப்ட் Delft தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில்

பணியாற்றும் மார்கோ லாங்ப்ரூக், விண்கலத்தின் நகர்வை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார்.

51.7 டிகிரி சுற்றுப்பாதை சாய்வுடன், காஸ்மோஸ் 482, 52 டிகிரி வடக்கு மற்றும் 52 டிகிரி தெற்கு அட்சரேகைக்கு இடையில் விழலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. விண்கலத்தின் பெரும்பகுதி சிதைவுகள் கடலில் விழும் அதே வேளையில், நிலத்திலும் கணிசமான தாக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது.

ராக்கெட் ஏவுதல் தோல்வியடைந்ததால், இரண்டாகப் பிரிந்த காஸ்மோஸ் 482-வின், பிரதான விண்கலம் 1981 மே 5 ஆம்

தேதி பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தது. மறுபுறம் தற்போது பூமியில் விழவிருக்கும் லேண்டரானது 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுப்பாதையில் சுற்றிவந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்