``எந்த மருந்துக்கும் கட்டுப்படாது''... பறிபோன 58ஆயிரம் குழந்தைகள் உயிர்- மருத்துவ உலகம் எச்சரிக்கை
மருந்து மாத்திரைகளுக்கு கட்டுப்படாத சூப்பர் பக்ஸ்(Super Bugs) வகையைச் சேர்ந்த ஆபத்தான கிருமி, வீட்டில் வளர்க்கப்படும் நாய்களிடத்தில் காணப்படுவதாக வெளியாகியிருக்கும் ஆய்வு முடிவு செல்லப்பிராணிகள் வளர்ப்போரை கதிகலங்கச் செய்துள்ளது.
மனிதர்களுக்கு பல்வேறு வகையான நோய் தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சைகள் ஆகியவை அண்மைக்காலமாக மருந்து மாத்திரைகளுக்கும் கட்டுப்படாமல் வீரியம் மிக்கவையாக மாறிவருவது பெரும் தலைவலியாக உருவெடுத்துவிட்டது. மருத்துவ உலகம் இதனை சூப்பர் பக்ஸ் என்றழைக்கிறது.
கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் சூப்பர் பக்ஸ் கிருமிகளால் சுமார் 58 ஆயிரம் குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணியான நாய்களில் ஆண்டிபயாடிக் ரெசிஸ்டென்ட் வகையை சேர்ந்த சால்மொனெல்லா பாக்டீரியாக்கள் அதிகம் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுவாக, அசுத்தமான உணவு மற்றும் நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட மனிதன் அல்லது விலங்கின் மூலமாகவே சால்மொனெல்லா பரவும் அபாயம் இருக்கிறது.
ஆனால், அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் உயிருக்கு ஆபத்தான சால்மொனெல்லா தொற்றை ஏற்படுத்த வல்லது என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பாக Zoonoses and public Health ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், மருந்துகளுக்கு கட்டுப்படாத சால்மொனெல்லா பாக்டீரியாக்கள் நாய்களிடமிருந்து பரவும் ஆபத்து அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பை ஏற்படுத்தும் இத்தகைய நாய்கள் அறிகுறியுடனோ அல்லது அறிகுறியற்றதாகவோ இருக்கலாம் என்றும், ஆரோக்கியமாக காணப்படும் நாய்கள் கூட சால்மொனெல்லா பாக்டீரியாவை சுமந்திருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
எனவே, நாய்கள் போன்ற செல்லப்பிராணிகள், கால்நடைகள், விலங்குகளுடன் நெருங்கிப் பழகும் நபர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆடு, மாடுகளை எப்படி நம்முடன் படுக்கையில் அனுமதிக்க மாட்டோமோ, அதுபோலவே நாய்களையும் நம் அருகே படுக்கையில் அனுமதிக்க கூடாது என்றும், முகத்தை நாவால் வருட அனுமதிப்பது போன்ற செயல்கள் நோய் கிருமி தொற்றுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும் என்றும் சுகாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.