கொத்து கொத்தாக சாகும் மக்கள்.. கொடூர தாக்குதலில் அமெரிக்கா - மிகப்பெரிய பதிலடி.. உச்சகட்ட எச்சரிக்கை
ஈரானில் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நேரடி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானுக்கு எதிராக ஒருபுறம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்கியுள்ளது. ஈரான் மீதான தாக்குதலை மிக வெற்றிகரமாக முடித்துவிட்டதாகவும், ஈரானில் உள்ள ஃபார்டோ, நடான்ஸ், எஸ்ஃபஹான் ஆகிய அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அனைத்து விமானங்களும் ஈரானின் வான்வெளிக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஃபார்டோவில் குண்டுகள் முழுமையாக வீசப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த ராணுவ நடவடிக்கைக்காக அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள டிரம்ப், வேறு எந்த ராணுவமும் இதைச் செய்திருக்க முடியாது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். இது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலகிற்கு ஒரு வரலாற்று தருணம் என்று தெரிவித்துள்ள டிரம்ப், ஈரான் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்து ஊக்குவித்து வருவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டினார். ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக தெரிவித்தார். ஈரானுக்கு இரண்டு வாய்ப்புகளே உள்ளதாகவும், ஒன்று அமைதி... மற்றொன்று பெருந்துயரம் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திறனை அழிப்பதும், ஈரானால் முன்வைக்கப்படும் அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்துவதும் தங்கள் நோக்கம் என்று தெரிவித்தார். கடந்த 40 ஆண்டுகளாக, அமெரிக்காவிற்கு மரணம்... இஸ்ரேலுக்கு மரணம் என்று ஈரான் கூறி வருவதாக தெரிவித்துள்ள டிரம்ப், அவர்கள் நமது மக்களை கொன்று வருவதாக குற்றம் சாட்டினார். ஈரான் அமைதிப்பாதைக்கு திரும்பாவிட்டால் தாக்குதல் தொடரும் என்றும் டிரம்ப் சூளுரைத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் துணிச்சலான முடிவு வரலாற்றை மாற்றும் என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை சுட்டிக்காட்டி, டிரம்ப்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அற்புதமான வலிமையால், ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைக்கும் துணிச்சலான முடிவை மேற்கொண்டுள்ளதாக பாராட்டியுள்ளார். மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளை வளம் மற்றும் அமைதியின் எதிர்காலத்திற்கு இட்டுச் செல்ல டிரம்ப்பின் இந்த நடவடிக்கை உதவும் என்றும் இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.