அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் இடையிலான மோதல் வலுத்துள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தில் செயல்திறன் துறை தலைவர் பதவியில் இருந்து விலகிய எலான் மஸ்க், டிரம்ப் முன்னெடுத்துள்ள மசோதாவையும் கடுமையாக விமர்சித்தார். இதற்கு, இனி நாங்கள் நண்பர்களாக இருப்போமா என தெரியாது என டிரம்ப் அதிருப்தி தெரிவித்தார். மேலும், மஸ்க்குடன் மேற்கொண்ட ஒப்பந்தங்கள், அவருக்கு வழங்கப்படும் மானியங்களை ரத்து செய்வதன் மூலம் அரசு நிதியை சேமிக்க முடியும் என்றும் டிரம்ப் அதிரடியாகப் பதிவிட்டார். இந்நிலையில், இதற்கு எதிர்வினையாற்றியுள்ள எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், டிராகன் விண்கலன்கள் தொடர்பான செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளும் என திடீரென அறிவித்துள்ளார். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப டிராகன் விண்கலன்களை பயன்படுத்திவரும் நிலையில் மஸ்க்கின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.