பத்திரிகை அதிபர்களுடன் கலந்துரையாடிய மத்திய அமைச்சர்கள்- தினத்தந்தி குழும தலைவர் பங்கேற்பு
டெல்லியில் பத்திரிகை அதிபர்களுடன் மத்திய அமைச்சர்கள் நடத்திய கலந்துரையாடலில், தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..பாஜக ஆட்சிக்கு வந்து, 11 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பத்திரிகை மற்றும் ஊடக அதிபர்கள், மூத்த செய்தியாளர்கள் உடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாஜக தேசிய தலைவரும் சுகாதார அமைச்சருமான ஜே.பி.நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் பங்கேற்றனர். பத்திரிகை துறை சார்பில், தமிழ்நாட்டில் இருந்து தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், 11 ஆண்டுகால பாஜக ஆட்சியின் சாதனைகள் பற்றி புள்ளி விவரங்களுடன் விவரித்தார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு நாடு எப்படி இருந்தது?, தற்போது எந்தெந்த துறைகளில் என்னென்ன வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது? என்பதை பட விளக்கத்துடன் காண்பித்தார். குறிப்பாக பெண்கள் மேம்பாடு, விவசாயிகள் நலன், உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை விரிவாக எடுத்துரைத்தார். யு.பி.ஐ. பண பரிவர்த்தனைக்கான நேரம் 2 வினாடிக்கும் குறைவுதான் என்பதை பெருமையுடன் குறிப்பிட்டார்.இதனைத் தொடர்ந்து பத்திரிகை அதிபர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களுடன் மத்திய அமைச்சர்கள் இரவு விருந்தில் பங்கேற்றனர். அப்போது அவர்கள் பல்வேறு விஷயங்கள் பற்றி கலந்துரையாடினர்.