மாணவி தற்கொலை விவகாரம் - தனியார் கல்லூரி முதல்வர் கைது
சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்த மாணவி, அதே கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவரை காதலித்து வந்ததாகவும், அவருடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட விவகாரத்தில், கல்லூரி நிர்வாகம் அவரது தாயை வரவழைத்து மாணவியை கண்டித்து மன்னிப்பு கடிதம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி, கடந்த 20ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் மாணவியை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி கடந்த 23ம் தேதி சக மாணவர்கள் கல்லூரி நுழைவாயிலில் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாகக் கூறி, கல்லூரி முதல்வர் அசோக் மற்றும் உதவியாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கல்லூரி முதல்வர் அசோக் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில் கல்லூரி முதல்வரின் உதவியாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
