அரசியல் ரீதியாக தன்னை எதிர்கொள்ள முடியாமல் போலியான குற்றச்சாட்டுகளை அள்ளித்தெளிப்பதா என, முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 3 ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டு இப்போது மட்டும் சென்றது ஏன்?... தமிழ்நாட்டுக்கான நிதிக்காகவா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்....அதற்கான உண்மை பதில் என்ன? என்று வினா எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராகிய தான் எங்கு, எப்படி செல்கிறேன் என்று கண்காணிக்க செலவிட்ட நேரத்தை, தங்கள் ஆட்சியில் நடக்கும் குற்றங்களைத் தடுப்பதில் செலவிட்டு இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
எந்த ரெய்டைப் பார்த்து தனக்கு பயம்?... இந்த ரெய்டுக்கும் தனக்கும் என்ன சம்பந்தம்? என்று கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி, முதல்வர் குறிப்பிடும் உறவினர்கள், தனக்கு உறவினர் ஆகும் முன்னரே பல தொழில்களை செய்து வந்தவர்கள்... இரு முறை வருமான வரி சோதனைகளை சந்தித்தவர்கள்.... முரண்பாடுகள் இருப்பின், முறையாக கணக்கு காட்டி, அதற்கான விளக்கத்தை அளிக்கப் போகிறார்கள்.... இதில் தான் செய்வதற்கு எதுவுமே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.