பிளான் கொடுத்த கூகுள்.. ஸ்கெட்ச் போட்ட யூடியூப் - இளைஞருக்கு ஊதப்பட்ட சங்கு
முன்னாள் காதலியின் கணவரை கொல்ல பார்சல் பாம் அனுப்பிய நபர் கைது
சத்தீஸ்கரில், முன்னாள் காதலியின் கணவரை கொல்ல பார்சல் பாம் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் கயிராகர் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் வினய் வர்மா என்பவர், தான் கல்லூரி படித்த காலத்தில் அதே கல்லூரியில் படித்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு சில மாதங்களுக்குமுன்பு, அப்சல் கான் என்பவருடன் திருமணம் ஆனது. இந்நிலையில், அப்சல் கானை கொல்ல சதித்திட்டம் தீட்டிய வினய் வர்மா, காவல்துறையிடம் பிடிபடாமல் வெடிகுண்டு மூலம் ஒருவரை கொலை செய்வது எப்படி? என கூகுளில் தேடியுள்ளார். அதில் கிடைத்த தகவல்களை கொண்டு, youtube மூலம் ஐஇடி வெடிகுண்டுகளை தானே தயாரிக்க கற்றுக் கொண்டார். மேலும், கல் குவாரியில் இருந்து தனக்கு தெரிந்தவர் மூலம் ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வெடிகுண்டை தயாரித்து அதனை ஸ்பீக்கருக்குள் வைத்துள்ளார். ஸ்பீக்கருடன் இணைக்கப்பட்டிருந்த வயர் பிளக்கில் சொருகியதும் வெடிக்கும் வகையில் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த ஸ்பீக்கர் பார்சலை அப்சல் கானுக்கு வினய் வர்மா அனுப்பி வைத்துள்ளார். அதன் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக India Post என்ற ஸ்டிக்கரையும் போலியாக ஒட்டி உள்ளார். பார்சலை பிரித்ததும் சந்தேகமடைந்த அப்சல் கான், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் ஆய்வு செய்த போது பார்சலுக்கு உள்ளே ஸ்பீக்கருக்குள் இரண்டு கிலோ வெடி பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, வினய் வர்மா மற்றும் அவருக்கு உதவிய பரமேஷ்வர் வர்மா, கோபால் வர்மா உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.