மத்தியப்பிரதேசத்தில் சுரங்கப்பணியில் ஈடுபட்ட ஏழை நண்பர்கள் இருவருக்கு, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரம் கிடைத்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் பண்ணா மாவட்டம், ராணி கஞ்ச் மொஹல்லா பகுதியை சேர்ந்தவர்கள் சதீஷ் காதிக் மற்றும் சாஜித் மொஹம்மத். நண்பர்களான இருவரும் மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணியை சேர்ந்தவர்கள். சதீஷ் இறைச்சி கடை நடத்தி வரும் நிலையில், சாஜித் பழ வியாபாரம் செய்து வருகிறார். இருவருமே தங்கள் சகோதரியின் திருமண செலவிற்கு செய்வதறியாமல் கவலையுற்று இருந்தனர்.
இந்நிலையில், இருவரும் சேர்ந்து கிருஷ்ணா கல்யாண் பூர் பகுதியில், மாவட்ட சுரங்க அலுவலரிடம் கட்டணம் செலுத்தி சிறிய சுரங்க பகுதியை குத்தகைக்கு எடுத்தனர். குடும்ப கஷ்டம் முடிவுக்கு வந்துவிடாதா? என்ற ஏக்கத்தில் இருவரும் சுரங்கத்தை தோண்டியபோது, மண்ணில் பளபளப்பான பொருள் மின்னுவதை கண்டனர். முதலில் சாதாரண கல் என்று நினைத்த இருவரும், அதனை வைர அலுவலரிடம் பரிசோதித்தனர். அப்போது இது உண்மையான 15 கேரட் வைரம் என்றும், அதன் மதிப்பு 50 முதல் 60 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்பதும் தெரியவந்தது. பல ஆண்டுகால வறுமை முடிவுக்கு வந்துள்ளதால் நண்பர்கள் இருவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.