அசுர பலம் கொண்ட ராணுவத்தால் உலகை மிரட்டும் டாப் 5 நாடுகள் -வல்லரசுகளை புருவம் உயர்த்த வைத்த இந்தியா!

x

உலக அளவில் ராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடுகள் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது இந்தியா.

வறுமையில் சிக்கித்தவிக்கும் நாடுகள் தொடங்கி வல்லரசு நாடுகள் வரை ராணுவத்திற்கு செலவிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

அந்த வகையில் அனைத்து நாடுகளும் ராணுவத்திற்காக செலவிடும் தொகை ஆண்டுதோறும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், SIPRI எனப்படும் ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி நிறுவனம் 2023-ல் உலக நாடுகளின் ராணுவ செலவுகள் பற்றிய ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2023-ல் உலக நாடுகளின் ராணுவ செலவுகள் 203 லட்சம் கோடி ரூபாயாக, 2022 அளவை விட 6.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

ராணுவ செலவுகளில் முதலிடத்தில் தொடரும் அமெரிக்காவின் ராணுவ பட்ஜெட், 2023-ல் 76.37 லட்சம் கோடி ரூபாயாக, 2022 அளவை விட 2.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது, ஒட்டுமொத்த உலக நாடுகளின் மொத்த ராணுவ செலவுகளில் 37 சதவீதம் ஆகும். இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவின் ராணுவ பட்ஜெட், 2023-ல் 24.67 லட்சம் கோடி ரூபாயாக, 2022 அளவை விட 6 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த பட்டியலில் உக்ரைன் மீது போர் தொடுத்துவரும் ரஷ்யா மூன்றாம் இடத்தில் உள்ளது. ரஷ்யா 2023 ராணுவ பட்ஜெட்டில் 9.08 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இது 2022 ல் ஒதுக்கிய நிதியை விட 24 சதவீதம் அதிகம் ஆகும்.

அதே போல், நான்காம் இடத்தில் உள்ள இந்தியா 2023ல் ராணுவத்திற்கு ஒதுக்கிய நிதி 6.96 லட்சம் கோடி ரூபாயாகும். இது 2022 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட 4.2 சதவீதம் அதிகம். ஐந்தாம் இடத்தில் சவுதி அரேபியா உள்ளது. சவுதி அரேபியாவின் ராணுவ பட்ஜெட், 2023-ல் 6.32 லட்சம் கோடி ரூபாயாக, 2022 அளவை விட 4.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலக அளவில் மொத்த ராணுவ செலவுகளில், டாப் 5 நாடுகளின் பங்கு 61 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் காசா மீது போர் தொடுத்துவரும் இஸ்ரேல், 2.29 லட்சம் கோடியுடன் 15 வது இடத்தில் உள்ளது. இது கடந்த 2022 ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட 24 சதவீதம் அதிகம் ஆகும்.அதே போல், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் பாகிஸ்தான் இந்த பட்டியலில் 30 வது இடத்தை பிடித்துள்ளது. 2023-ராணுவ பட்ஜெட்டில் 71 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது பாகிஸ்தான். இது கடந்த ஆண்டை விட 13 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில், போர்களை நடத்திவரும் ரஷ்யாவும், இஸ்ரேலும் 2023ம் ஆண்டு அதிகபட்சமாக 24 சதவீதம் வரை நிதியை உயர்த்தி ஒதுகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை பொருத்தவரை ராணுவ பட்ஜெட்டில் ௮௦ சதவீத தொகை, சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கு செலவிடப்படுகிறது.

வெறும் 20 சதவீதம் மட்டுமே நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் கொள்முதலுக்கு ஒதுக்கப்படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்