பூமியைத் தாக்குமா சூரியப் புயல்? உலக நாடுகளுக்கு எச்சரிக்கை மணி...

சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்ட 40 செயற்கை கோள்கள் சூரியப் புயலால் எரிந்து நாசமாகியுள்ளது.
பூமியைத் தாக்குமா சூரியப் புயல்? உலக நாடுகளுக்கு எச்சரிக்கை மணி...
x
சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்ட 40 செயற்கை கோள்கள் சூரியப் புயலால் எரிந்து நாசமாகியுள்ளது. சூரியப் புயல் பூமியைத் தாக்கினால் ஏற்படும் ஆபத்துகள் என்ன என்பதை அலசுகிறது. 

உலகின் நம்பர் ஒன் பணக்காரர், எலோன் மஸ்க். பூமியின் மூலை முடுக்கெல்லாம் இணைய இணைப்பு சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் அவரின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. 

அப்படி பிப்ரவரி 3ம் தேதி ஏவப்பட்ட 49 செயற்கைக்கோள்களில் 40 செயற்கைக்கோள்கள் தற்போது சூரியப் புயலால் பாதிக்கப்பட்டு தீக்கு இரையாகியுள்ள சம்பவம்தான் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. 

சூரியப் புயல் என்பது சூரியனில் இருந்து திடீரென வெளிப்படும் அதித ஆற்றல் கொண்ட சூரியக் காற்றுதான். விண்வெளியில் நிலை நிறுத்தப்படும் செயற்கை கோள்களை இது கடுமையாக பாதித்து விடும். பூமியிலும் கம்பியில்லா தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படும் ரேடியோ அலைகளை இது பாதிக்கும். அதனால் தகவல் தொடர்புகளே முடங்கும். மின்சார இணைப்புகளையும் இந்த சூரியக் காற்று பாதிப்பதால் உலகமே இருளில் மூழ்கும் ஆபத்தும் உண்டு.

முதன் முதலில் சூரியப் புயல் தாக்குதல் கடந்த 1859ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது... அப்போது டெலிகிராஃப் நெட்வோர்க் சேவை பாதிக்கபட்டதோடு, மின்சார அதிர்வுகள் தென்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

ஆனால், தற்போது உலகமே இணையத்தை நம்பி இருக்கிறது. சிறு சிறு பணப் பரிமாற்றங்கள் முதல் உணவுக்கான நெல் கொள்முதல் வரை அனைத்துமே இணையத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன. 

இணைய இணைப்பு ஒரு மணிநேரம் துண்டிக்கப்பட்டாலே உலகப் பொருளாதாரம், கோடிக்கணக்கில் நஷ்டத்தை சந்திக்கும் என்பது மனிதர்கள் திண்டாடிப் போவார்கள் என்பதுமே நிஜம்.

இந்நிலையில் இது போன்ற சூரியப் புயல்கள் இனி அடிக்கடி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கொல்கத்தாவில் உள்ள Indian Institute of Science Education and Research தெரிவித்துள்ளது. இனியொரு சூரியப் புயல் இதை விட வீரியமாக ஏற்பட்டால் என்ன செய்வது? இதுதான் இன்று உலக விஞ்ஞானிகளின் முதல் கவலை.

சூரியனை கூர்ந்து கவனிப்பதற்காகவே Aditya-L1 என்ற விண்கலத்தை உருவாக்கி வருகிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ. அதன் மூலம் சூரியப் புயல் குறித்த முன் அறிவிப்புகளும் தற்காப்புகளும் முன்னெடுக்கப்பட்டு, அது உலகுக்கே உதாரணமாக அமைய வேண்டும் என்பதே இந்திய விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பு!


Next Story

மேலும் செய்திகள்