ஹைபர்சோனிக் ஏவுகணை தாக்குவது எப்படி...?

ஒட்டுமொத்த உலகும் அதிர்ச்சியடையும் வகையில், உலகின் மிகவும் வேகமான மற்றும் ஆபத்தான ஹைபர்சோனிக் ஏவுகணையை , சீனா பரிசோதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
x
ஒட்டுமொத்த உலகும் அதிர்ச்சியடையும் வகையில், உலகின் மிகவும் வேகமான மற்றும் ஆபத்தான ஹைபர்சோனிக் ஏவுகணையை , சீனா பரிசோதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஹைபர்சோனிக் ஏவுகணைகள் செயல்படுவது எப்படி...? அவை ஏன் மிகவும் ஆபத்தானவை என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்... 

 
உலகின் மிகப்பெரிய வல்லரசு என தன்னை பறைசாற்றி கொள்ளத் துடிக்கும் சீனா, பொருளாதாரத்தில் மட்டுமின்றி ராணுவ கட்டமைப்பு, ஆயுத தயாரிப்பிலும் அமெரிக்காவுக்கு போட்டியை கொடுத்து வருகிறது.  

உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே 6 ஆம் தலைமுறை போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க்கப்பல்களையும் உருவாக்கி வரும் சீனா, தற்போது ஹைபர்சோனிக் ஆணுஆயுத ஏவுகணை பரிசோதனையிலும் தீவிரம் காட்டுகிறது. 

கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஹைபர்சோனிக் ஏவுகணைகளை சீனா பரிசோதனை செய்திருக்கிறது எனவும், ஏவுகணைகள் சில மைல் தொலைவில் இலக்கை தவறவிட்டுள்ளன என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால்.... உலகை தனது கழுகுபார்வையில் கண்காணிக்கும் அமெரிக்க உளவுப்பிரிவுக்கே சீனா ஹைபர்சோனிக் ஏவுகணை பரிசோதனை மேற்கொண்டது தெரியாது என்பதாகும்.... 

சீனா தற்போது பரிசோதனை செய்திருக்கும் ஹைபர்சோனிக் ஏவுகணைகள் எதிர்பார்த்ததைவிடவும் நவீனமாக இருப்பது அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் அதிகாரிகளையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹைபர்சோனிக் ஏவுகணை தாக்குதல் முறையில், அணு ஆயுதம் தாங்கிய ஹைபர்சோனிக் வானூர்தி ஏவுகணை முதலில் ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்படும்.

தரையிலிருந்து மேலே செல்லும் ராக்கெட், சுமார் 70 கிலோ மீட்டருக்கு மேல், 100 கிலோ மீட்டருக்கு உள்ளே இடைப்பட்ட தொலைவில் புவி சுற்றுப்பாதையில் ஹைபர்சோனிக் வானூர்தியை நிறுத்திவிடும்.

அங்கிருந்து பூமியை சுற்றிவரும் ஹைபர்சோனிக் ஏவுகணை, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட இடம் வந்ததும் தரையை நோக்கி வேகமாக வந்து தாக்குதலை தொடுக்கும். 

ஹைபர்சோனிக் ஏவுகணை ஒலியைவிடவும் 5 மடங்கு வேகமாக பயணம் செய்ய கூடியது.

வழக்கமாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் புவியின் சுற்றுப்பாதையில் 400 கிலோ மீட்டருக்கும் அப்பால் சென்று பின்னர் பூமியிலிருக்கும் இலக்கை நோக்கி கீழே வரும். அப்போது ரேடாரில் சிக்கிவிடும்.

ஆனால் ஹைபர்சோனிக் ஏவுகணை 100 கிலோ மீட்டருக்கு உள்ளே பயணிக்கும்போது ரேடாரில் சிக்காது.

வானில் எதிரிநாட்டு ஏவுகணைகளை அழிக்கும் வான் பாதுகாப்பு கட்டமைப்பை சில நாடுகள் கொண்டிருந்தாலும், ஹைபர்சோனிக் ஏவுகணைகள் புவி சுற்றுப்பாதையில் இருந்து ஒலியைவிட 5 மடங்கு வேகமாக இலக்கை நோக்கி இறங்கும் போது, அவைகளை அழிக்க முடியாது என்கின்றனர் பாதுகாப்பு வல்லுநர்கள்.

ஹைபர்சோனிக் ஏவுகணை பரிசோதனையை மறுக்கும் சீனாவோ, மறுசுழற்சி விண்கல பரிசோதனையில் ஈடுபட்டதாக கூறுகிறது. ஆனால் இதனை ஏற்க மறுக்கும் சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்கள், 
சீனாவின் ஹைபர்சோனிக் ஏவுகணை பரிசோதனை, மிகப்பெரிய ஆயுத போட்டிக்கு வழிவகை செய்யும் எனவும் எச்சரிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்