கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக மசோதா- பாகிஸ்தான் நாடாளுமன்ற குழு நிராகரிப்பு

பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்ட மசோதாவை, அந்நாட்டு நாடாளுமன்ற குழு நிராகரித்துள்ளது.
கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக மசோதா- பாகிஸ்தான் நாடாளுமன்ற குழு நிராகரிப்பு
x
பாகிஸ்தானில் இந்து, கிறிஸ்தவ மற்றும் சீக்கிய மத சிறுமிகள் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, திருமணம் செய்யப்படும் சம்பவங்கள் வாடிக்கையாகி வருகிறது. 

ஆண்டு தோறும் ஆயிரம் இந்து சிறுமிகள் கடத்தப்பட்டு, மதமாற்றம் செய்யப்படுகிறார்கள் என மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

இதற்கு எதிராக போராடும் சிறுபான்மையினர், தங்களுக்கு நீதி கிடைப்பது இல்லை என குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு கொண்டுவரப்பட்ட கட்டாய மதமாற்ற எதிர்ப்பு சட்ட மசோதாவுக்கு மத விவகாரங்களுக்கான அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 
அத்துறை அமைச்சர் ஹக் காத்ரி, கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் நாட்டில் அமைதியை பாதிக்கும் என்றும் 

சிறுபான்மையினருக்கு மேலும் சிக்கலான சூழலை உருவாக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

மதம் மாற விரும்புபவர்கள் சுய விபரங்களுடன் எதற்காக மதம் மாறுகிறோம் என்ற தகவலை மாவட்ட நீதிபதியிடம் தெரிவிக்க வேண்டும் என்றும்

நீதிபதியே மதம் மாறுபவர்கள் வற்புறுத்தல், மிரட்டல் காரணமாக மதம் மாறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

கட்டாய மதமாற்றம் செய்வோருக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை, 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் ஷரத்து இடம்பெற்றிருந்தது. 

இந்நிலையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் தரப்பில் பாகிஸ்தானில் இஸ்லாமுக்கு எதிரான எந்தஒரு சட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதம் மாறுவதற்கு வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படுவதற்கும் அவர்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்ற குழு நிராகரித்துள்ளது என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இது சிறுபான்மையினரை ஒடுக்கும் செயல் என விமர்சனம் செய்திருக்கும் இம்ரான் கான் கட்சியை சேர்ந்த இந்து உறுப்பினர் லால் சந்த் மால்கி, 

மசோதாவை நிராகரிப்பது சிறுபான்மையினர் வாழ்க்கையை நரகமாக மாற்றும் செயல் எனக் கூறியிருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்