கூடுதல் டிக்கெட் விலை: விமான சேவையை நிறுத்திய பாகிஸ்தான்

ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர், அந்நாட்டிற்கு முதல் விமானத்தை இயக்கிய பாகிஸ்தான் இப்போது விமான சேவையை நிறுத்தியிருக்கிறது. இதுகுறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்...
கூடுதல் டிக்கெட் விலை: விமான சேவையை நிறுத்திய பாகிஸ்தான்
x
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதும் சர்வதேச விமான நிறுவனங்கள், அந்நாட்டுக்கான விமான சேவையை நிறுத்திவிட்டன. பாகிஸ்தான் மட்டும் செப்டம்பர் இரண்டாவது வாரமே காபூல் நகருக்கு விமான சேவையை தொடங்கியது. 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், உலக நாடுகள் ஆப்கானுக்கு ஆதரவுகரம் நீட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தலிபான்களும் சர்வதேச விமானங்களை இயக்க விமான நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்தனர். 

இந்நிலையில் திடீரென பாகிஸ்தான் அரசின், சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனம், ஆப்கானுக்கான தங்கள் விமான சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. 

தலிபான்கள் தலையீடு அதிகமாக இருப்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஆப்கானுக்கு பல நிறுவனங்கள் விமானங்களை இயக்காத நிலையில் பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனம் இஸ்லாமாபாத்தில் இருந்து, காபூல் செல்ல ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 70 ரூபாயை டிக்கெட் கட்டணமாக நிர்ணயம் செய்திருந்தது. இதுவே, தலிபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வருவதற்கு முன்னதாக கட்டணம் 11 ஆயிரம் ரூபாய்க்குள் இருந்துள்ளது. 

இந்நிலையில் விமான டிக்கெட் கட்டணத்தை குறைக்கவில்லை என்றால் விமானங்களை இயக்க தடை விதிக்கப்படும் என பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தையும், ஆப்கானின் காம் ஏர் நிறுவனத்தையும் தலிபான் நிர்வாகம் எச்சரித்திருந்தது. 

தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக என்ன கட்டணம் வசூலிக்கப்பட்டதோ, அதே கட்டணத்தைதான் வசூலிக்க வேண்டும் என தலிபான்கள் எச்சரித்ததாக தகவல் வெளியாகியது. 

கட்டணம் அதிகமாக இருந்தால் பயணிகள் புகாரளிக்க வேண்டும் என தலிபான்கள் கேட்டுக்கொண்ட நிலையில், விமான சேவையை நிறுத்துவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்திருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்