இந்திய-பசிபிக் கடலில் பாதுகாப்பு ஒப்பந்தம்: அமெரிக்கா, ஆஸி., பிரிட்டன் கூட்டணி

இந்திய பசிபிக் பெருங்கடல் முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவை இணைக்க முடியாது என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதன் பின்னணி குறித்து விரிவாக பார்ப்போம்..
இந்திய-பசிபிக் கடலில் பாதுகாப்பு ஒப்பந்தம்: அமெரிக்கா, ஆஸி., பிரிட்டன் கூட்டணி
x
இந்திய பசிபிக் பெருங்கடல் பகுதி..

இங்கு ஆதிக்கம் செலுத்துவதில் வல்லரசு நாடுகள் போட்டா போட்டி போடுவதால், சர்வதேச அரசியலில் பேசுபொருளாக உள்ளது இந்த பெருங்கடல் பகுதி.

சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில், அதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக,


பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து AUKUS என்ற முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தை கொண்டு வந்துள்ளது அமெரிக்கா.

எனினும், இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவையும், ஜப்பானையும் இணைக்காதது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

இதைபற்றி சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போது, AUKUS ஒப்பந்தத்தில் வேறு எந்த நாடுகளையும் சேர்க்க முடியாது என வெள்ளை மாளிகை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது



முன்னதாக, இந்திய பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பலை வாங்க பிரான்ஸிடம் ஆஸ்திரேலியா ஒப்பந்தம் மேற்கொண்டது.

ஆனால் இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே ஒப்பந்தத்தை ரத்து செய்த ஆஸ்திரேலியா,


அமெரிக்கா, பிரிட்டனுடன் இணைந்து சுமார் 8 அணு ஆயுதம் தாங்கிய போர்க் கப்பல்களை வாங்க AUKUS ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இதற்கு பிரான்ஸ் அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது

காரணம், இந்திய பசிபில் பெருங்கடலில் பிரான்ஸ் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் 7,000 பிரெஞ்ச் படைகளும், 20 லட்சம் பிரான்ஸ் மக்களும் உள்ளனர்.

இந்த சூழலில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை ஆஸ்திரேலியா கைவிட்டதோடு, படை பலத்தை அதிகரிக்கும் வாய்ப்பு நழுவியதால் பிரான்ஸ் அதிருப்தி அடைந்துள்ளது.

மறுபக்கம் AUKUS ஒப்பந்தத்தால் ஆஸ்திரேலியாவிற்கு தான் பெரும் ஆபத்து எனவும், எந்த மோதல் வந்தாலும் ஆஸ்திரேலியா தான் கடுமையாக பாதிக்கும் என சீனா விமர்சித்துள்ளது.


இந்த விவகாரம் பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இம்மானுவேல் மேக்ரானும் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பேசியதாகவும், இதுகுறித்து விரிவாக ஆலோசிக்க பிரான்ஸ் தூதர் அடுத்த வாரம் அமெரிக்க வருவார் என மேக்ரான் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறுபக்கம் QUAD கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள சூழலில், AUKUS ஒப்பந்தம் குறித்து அவர் விரிவாக ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்