இந்தோ-பசிபிக்கில் சீனாவின் நகர்வுக்கு செக்...மூன்று நாடுகள் சேர்ந்து ஆக்கஸ் திட்ட அறிவிப்பு

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு செக் வைக்கும் வகையிலான சிறப்பு பாதுகாப்பு உடன்பாட்டை அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கூட்டாக அறிவித்துள்ளன.
இந்தோ-பசிபிக்கில் சீனாவின் நகர்வுக்கு செக்...மூன்று நாடுகள் சேர்ந்து ஆக்கஸ் திட்ட அறிவிப்பு
x
இந்தோ-பசிபிக் பகுதியில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கு மற்றும் ராணுவ செயல்பாடுகளுக்கு செக் வைக்கும் விதமாக பிராந்தியத்தில் இருக்கும் பிற நாடுகளுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 
 
இதற்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட்  கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த நாடுகள் தரப்பில் உளவுத்துறை தகவல்கள் பரிமாற்றம் மற்றும் போர் பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அமெரிக்காவில் ஜோ பைடன் நிர்வாகம் பொறுப்பேற்ற பின்னர் இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாகியிருக்கிறது என்பது சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்களின் கூற்றாக இருக்கிறது. விரைவில் குவாட் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டை அமெரிக்கா நடத்துவதில் சீனா ஏற்கனவே அதிருப்தி அடைந்துள்ளது.

இந்நிலையில் மற்றொரு குறிப்பிடத்தக்க நகர்வாக, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும்  ஆஸ்திரேலியா இணைந்து, சிறப்பு பாதுகாப்பு உடன்பாடான ஆக்கஸ் திட்டத்தை கூட்டாக அறிவித்து உள்ளன. 

இத்திட்டம் மூலம் ஆஸ்திரேலியாவின் படை திறன் விரைவில் அதிகரிக்கப்படும் என்றும் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா பெற உதவி செய்வோம் என்றும் ஆக்கஸ் திட்டம் தொடர்பான மூன்று நாடுகளின் கூட்டு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உளவுத்துறை, சைபர் பாதுகாப்பு, கடலின் அடியில் பாதுகப்பை வலுப்படுத்தும் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்றும் திட்டம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கும் மற்றும் நலன்களுக்கு உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் காணொலி மூலம் கூட்டாக அறிவித்திருக்கும் இத்திட்டம் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மூன்று நாடுகளுக்கிடையேயான மிகப்பெரிய பாதுகாப்பு திட்டம் இதுயென பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்