முழுமையாக வெளியேறிய அமெரிக்க படை - தலிபான்களின் அடுத்தகட்ட நகர்வு என்ன?

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை வெளியேறியுள்ளது. இனி தலிபான் ஆட்சியின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும்? பார்க்கலாம்...
முழுமையாக வெளியேறிய அமெரிக்க படை - தலிபான்களின் அடுத்தகட்ட நகர்வு என்ன?
x
ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்ட அமெரிக்கப் படை அந்நாட்டை விட்டு முழுமையாக வெளியேறியுள்ளது. அமெரிக்க படையின் கடைசி வீரராக மேஜர் ஜெனரல் கிறிஸ் டோனாஹியூ விமானம் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து திங்கள்கிழமை வெளியேறினார். 20 ஆண்டுகால போருக்கு பின்னர் அமெரிக்கப்படை வெளியேறியதை தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், பட்டாசுகளை வெடித்தும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இத்தகைய சூழலில் ஆப்கானிஸ்தானின் அடுத்தகட்டம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. மத அடிப்படைவாத அமைப்பாக இருந்தாலும், ஆட்சி நிர்வாகத்தை மேற்கொள்ள மக்களின் ஆதரவை பெற வேண்டிய அவசியம் தலிபான்களுக்கு ஏற்பட்டுள்ளது. தலிபானின் கொடிய ஆட்சி அதிகாரத்தை இதுவரை காணாத இளம் தலைமுறையினர் ஆப்கானிஸ்தானில் அதிகம் உள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகத்தில் வாழ்ந்து பழகிய அவர்கள், தலிபான்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

ஏற்கெனவே தலிபான் அமைப்புக்கு எதிரான கிளர்ச்சிக் குழுக்கள் அந்நாட்டில் இயங்கி வருவதால் இவையெல்லாம் தலிபான் அரசுக்கு முக்கிய சவால்களாக அமையும். பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, வளர்ச்சி போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டிய கட்டாயமும் தலிபான் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இவை தவிர சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் அங்கீகாரத்தை பெற வேண்டிய அவசியமும் இருப்பதால், பிற நாடுகளுடன் வர்த்தக உறவு ஏற்படுத்த தலிபான் கவனம் செலுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார கட்டமைப்பை உருவாக்க வேண்டிய முக்கிய இலக்கு ஒருபுறம் இருந்தாலும், ஏற்கெனவே தாக்குதலை தொடங்கிவிட்ட ஐ.எஸ் தீவிரவாதிகளை எதிர்கொள்வது தலிபான்களுக்கு மற்றொரு நெருக்கடியாக இருக்குமென தெரிகிறது. எனவே, ஆப்கன் ஆட்சி நிர்வாகம் தலிபான்களுக்கு முள்கீரீடமாக இருக்கும் என்பதே சர்வதேச வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்