சீனாவை மிரட்டும் டெல்டா வைரஸ் - கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் அரசு

அதிவேகமாக பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா வைரஸ், சீனாவில் 18 மாகாணங்களில் பரவியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளையும், பரிசோதனையையும் அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
சீனாவை மிரட்டும் டெல்டா வைரஸ் - கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் அரசு
x
கொரோனா வைரஸ் தொற்றை உலகுக்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்படும் சீனாவில்,  உருமாறிய டெல்டா வைரஸ் கொரோனா தற்போது கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளது.

இந்தியாவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ், 100க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இப்போது இந்த வைரஸ் சீனாவின் 18 மாகாணங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பெய்ஜிங், ஜியாங்சு, சிச்சுவான் ஆகிய நகரங்களில் டெல்டா வைரஸ் பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றி , மக்களுக்கு  தடுப்பூசி செலுத்தி கொரோனாவை கட்டுக்குள் வைத்திருந்த சீனாவில் இப்போது, தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.  

இதற்கு அதிவேகமாக தொற்றும் தன்மைக் கொண்ட டெல்டா வைரஸே காரணம் என்பது அந்நாட்டை நடுங்க செய்திருக்கிறது. 

கடந்த 10 நாட்களில் 300 பேர் வரை, டெல்டா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர் என தெரியவந்துள்ளது.  

பெய்ஜிங்கில் டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள், சுற்றுலா நகரமான ஹூனான் மாகாணத்தின் ஜாங்ஜியாஜி பகுதிக்கு சென்று வந்தவர்கள் என்றும், இதேபோன்று 11 ஆயிரம் பேர் சுற்றுலா நகரிலிருந்து திரும்பியுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.  

இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வரும் மக்கள், தலைநகர் பீஜிங்கில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சீன தடுப்பூசிகள் டெல்டா வைரசுக்கு எதிராக வலுவான எதிர்ப்பு சக்தியை வழங்குவதில்லை எனக் கூறப்படும் நிலையில், சீனாவின் நோய் கட்டுப்பாட்டு அமைப்பின் முன்னாள் துணை இயக்குநர் ஜிஜியானும், 2 தடுப்பூசிகள் குறைந்த எதிர்ப்பு சக்தியையே வழங்குகிறது எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் சுற்றுலா சென்று திரும்பியவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தியிருக்கும் சீனா அரசு, தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் பரிசோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்