50 கோடி பூனைகள் - உலகளவில் அதிகமாக வளர்க்கப்படும் செல்லப் பிராணி

உலகளவில் அதிகமாக வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளில் பூனையும் ஒன்று. பூனைக்கு அழகே, அதனுடைய கண்களும் மீசையும் தான்.
50 கோடி பூனைகள் - உலகளவில் அதிகமாக வளர்க்கப்படும் செல்லப் பிராணி
x
வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளில், உலகளவில் பூனைகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன... சமூக வலை தளங்களிலும், பூனைகளே 
முதலிடத்தைப் பிடித்துள்ளன. உலகளவில் அதிகமாக வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளில் பூனையும் ஒன்று. பூனைக்கு அழகே, அதனுடைய கண்களும் மீசையும் தான்.உலகம் முழுவதும் 40 வகையான பூனை இனங்கள் உள்ளன. அதில், 50 கோடிக்கும் அதிகமான பூனைகள், வீடுகளில் வளர்க்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.பூனை மிகவும் சுத்தமான உயிரினம். மீன் குழம்பை விட அதிகளவில் விரும்பி சாப்பிடக் கூடியது கருவாட்டுக் குழம்பு தான். இவை, சுமார் 20 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. ஆனால், 30 வயது வரை வாழக்கூடிய பூனையும் இருக்கிறது.இங்கிலாந்தில் உள்ள Rubble என்ற பூனை 30வது பிறந்த நாளைக் கொண்டாடி, உலகிலேயே அதிக வயதுடையது என்ற சாதனை படைத்துள்ளது.இங்கிலாந்தில் உள்ள  Poppy  என்ற பூனைக்கு 24 வயதாகிறது.பூனைகள் 7 கிலோ வரையிலான எடையுடன் இருக்கும். சராசரியாக 25 செ.மீ. உயரமும், 46 செ.மீ. நீளமும் கொண்டது. 30 செ.மீ வரையிலான, நீளமான வால் இருக்கும். இதற்கு, மனிதனை விட 3 பற்கள் அதிகம். இது, மணிக்கு, 48 கி.மீ. வரை வேகமாக ஓடும் திறன் கொண்டது.இரண்டே மாதத்தில் கர்ப்பமடைந்து, முதல்முறை 2-லிருந்து 3 குட்டிகள் ஈனும். இரண்டாவது முறையிலிருந்து 4 முதல் 6 குட்டிகள் வரை ஈனும். வாழ்நாளில் 150-க்கும் மேற்பட்ட குட்டிகளை ஈனும் திறனுடையதாக கூறப்படுகிறது.கும்பகர்ணனைப் போல, ஒரு நாளைக்கு 12 லிருந்து 16 மணி நேரம் வரை பூனைகள் தூங்குமாம். அதிக சுறுசுறுப்புடன் இருக்கும் பூனையானது, அதனுடைய தலை எந்த இடத்தில் நுழையுமே அந்த இடத்தில் நுழைந்து விடும் உடலமைப்பைக் கொண்டது.

பூனைகளுக்கு அதிக இரவுப் பார்வை, கேட்கும் திறன் உண்டு. மனிதனுக்கு பார்க்கத் தேவைப்படும் ஒளியில் ஆறில் ஒரு பங்கு, ஒளியிலேயே பார்க்கக்கூடிய திறன் 

படைத்தவை. 

பூனைகள் தமது காதை 180 டிகிரி வரை அசைக்கக் கூடியதுடன்,  இரண்டு காதுகளையும் தனித்தனியாகவும் அசைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. இரவில் சிறு சத்தம் கேட்டாலும், சட்டென்று இரையை வேட்டையாடிவிடும்.பூனைகள் அமைதியாக அடி எடுத்து வைத்து வேட்டையாடும் திறன் கொண்டவை. முன்னங்கால்களை வைத்த அதே இடத்தில்தான் பின்னங்கால்களையும் வைக்குமாம். இதனால் சிறிது சத்தம் கூட இல்லாமல், இதனால் வேட்டையாட முடிகிறது.சத்தமின்றி, வேலையைக் கச்சிதமாக முடிக்கும் திறமை பூனைகளுக்கே உள்ள தனி சிறப்பு. மற்ற நேரத்தில் பூனைகள் 100-க்கும் அதிகமான சத்தம் எழுப்பும் திறன் உடையது.ஆரம்பத்தில் எலிகளை அழிக்க, பூனைகள் வளர்க்கப்பட்டன. பிறகு பூனைகள் மனிதனுடன் அன்பாகப் பழகும் விதத்தினால் ஈர்க்கப்பட்டு, வீட்டில் வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.சமூக வலை தளங்களில், அதிகம் பகிரப்படும் செல்லப்பிராணி பூனைகள் தான். உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு 14 லட்சம் பூனை புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. 3.5 லட்சம் பேர், தங்களது பூனைகளுக்கென சமூக வலை தள பக்கத்தை தொடங்கியுள்ளனர். 

ஃபெலிசிட் (Felicette) என்ற பெண் பூனை, 1963ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி  விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. விண்வெளிப் பயணம் முடிந்து உயிருடன் 
பூமிக்குத் திரும்பி, இது பிரபலமானது.எவ்வளவு குறும்புத்தனம் செய்தாலும், தமது எஜமானரைக் கண்டதும் வாலை ஆட்டி, அவர்களை உரசி, விளையாடி, அவர்களோடு படுத்து உறங்கி அன்பினை தெரிவித்து விடுகிறது. நன்றியுணர்வுமிக்க விலங்குகளின் பட்டியலில் பூனை இடம்பெறாவிட்டாலும், உலகம் முழுவதும் பூனை செல்லப்பிராணியாகவே 
வளர்க்கப்படுகிறது.பூனைகளின் குறும்புத்தனத்தை கொண்டாடுவதற்காகவே, ஆகஸ்ட் 8-ம் தேதி, சர்வதேச பூனை தினமாக, அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்