உலகையே அழிக்கத் துடிக்கும் ஆறாம் அறிவு

உலகின் மிக ஆபத்தான விலங்குகளின் பட்டியலில் முதலிடம் பிடிப்பது. நமக்கெல்லாம் ஆச்சரியம் தரும் ஓர் விலங்கு. இது மிக புத்திசாலியான பாலூட்டி விலங்கினம். அன்பு, பாசம் போன்ற உணர்வுகளை கற்பித்ததே இந்த விலங்குதான். அதனை ஒரேயடியாக போட்டு உடைத்து உலகையே அழிக்க நினைப்பதும் இந்த விலங்குதான். அந்த கொடூர விலங்கின் பெயர், மனிதன்
உலகையே அழிக்கத் துடிக்கும் ஆறாம் அறிவு
x
குரங்கில் இருந்து மனிதனாக நாம் பரிணாமம் கொண்ட ஹோமோசிபியன்ஸ் இந்த உலகில் தோன்றி 2 லட்சம் வருடங்களாகிறது. கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளாக நாம் நாகரிக வாழ்க்கை வாழ்கிறோம். இந்த 10 ஆயிரம் ஆண்டுகளில் போர் என்றும் பகை என்றும் சுமார் 100 கோடி மனிதர்களை மனிதர்களே கொன்றிருக்கிறார்கள் என தோராய கணக்கு சொல்கிறார்கள் மானுடவியலாளர்கள். இந்த அளவுக்கு மனிதர்களை வேறு எந்த கொடிய விலங்கும் கொன்று குவித்ததில்லை.

மனிதர்கள் மனிதர்களுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை. தந்தங்களுக்காக யானை வேட்டை... தோலுக்காக புலி, சிங்கம், பாம்பு வேட்டை... மருந்துக்காக சுரா வேட்டை என மற்ற விலங்குகளுக்கும் மரண பயம் கொடுப்பது மனிதன்தான்.

அடிப்படையில் எந்த வித வலிமையும் தற்காப்பு ஆயுதங்களும் இல்லாமல் பிறந்தவன் மனிதன். ஆனால், அவன் தன் மூளையைப் பயன்படுத்தி திமிங்கலங்களையே வேட்டையாடும் அளவுக்கு இயந்திரங்கள் செய்தான். எதனையும் எவரையும் அழிக்கக் கூடிய பேரழிவு ஆயுதங்கள் தற்போது மனிதனின் வசம் தான் உள்ளன. 

நேரடியாக மனிதர்களையும் விலங்குகளையும் கொன்று குவிப்பது மட்டுமல்ல... சுற்றுப்புற சுகாதாரங்களை சீரழிப்பதன் மூலம் மறைமுகமாகவும் மரணத்தை அழைப்பவன் மனிதன். காடுகள் அழிப்பு, தொழிற்சாலைகளின்  நச்சுப் புகை போன்றவை சில வன விலங்குகள் முற்றிலும் அழிந்து போக காரணமாய் அமைந்துள்ளன. இத்தனையும் செய்துவிட்டு மனிதர்களாகிய நாம் நம்மை எப்போதாவது கடிக்கும் பாம்பையும் புலி, சிங்கத்தையும் கொடிய விலங்குகள் எனப் பட்டியலிடுவதுதான் நகைச்சுவையின் உச்சம்.

Next Story

மேலும் செய்திகள்