உடலை எரிக்க மிரட்டியதா போலீஸ்? - உஷாராக கணவனை புதைத்த மனைவி.. தோண்டி ஸ்கேன் செய்ய கோர்ட் உத்தரவு
விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவில் வசித்து வந்த ராஜாவுக்குத் திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ள நிலையில், திருப்பச்சாவடிமேட்டில் உள்ள டாஸ்மாக் கடை உணவகத்தில் சமையல் கலைஞராக இருந்து வந்தார்... கடந்த 9ம் தேதி இரவு கடையிலேயே படுத்துறங்கிய ராஜாவை அடுத்த நாள் காலை ரோந்துப்பணியில் ஈடுபட்ட போலீசார் சந்தேகத்தின் பேரில் காவல்நிலையம் அழைத்துச் சென்று தாக்கி, மதுபாட்டில்கள் வைத்து வியாபாரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்து பிறகு ஜாமினில் விடுவித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது... வீட்டிற்கு வந்த ராஜா போலீசார் தன்னைத் தாக்கியதாகவும் நெஞ்சு வலிப்பதாகவும் கூறிய நிலையில், சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். போலீசார் ராஜா வீட்டிலேயே இறந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் பெற்று உடலை எரிக்க வேண்டும் என மிரட்டியதாகவும் ஆனால் மனைவி அஞ்சு உடலை புதைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மறு பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், ராஜாவின் உடலை 8 நாள்களுக்குள் மறுபிரேத பரிசோதனை செய்து, உடலை முழுவதுமாக ஸ்கேன் செய்ய உத்தரவிட்டது... அதன் அறிக்கை மற்றும் வீடியோ பதிவுகளை 24 மணி நேரத்திற்குள் அவரது குடும்பத்தினரிடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது...
மாஜிஸ்திரேட்டின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மக்கள் கண்காணிப்பக மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாறன், மக்கள் பாதுகாப்புக்கழக தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.
