தமிழகத்தை நடுங்கவிட்ட சம்பவம்.. 18 ஆண்டுக்கு பின் கிடைத்த நீதி.. 20 பேருக்கு சாட்டையடி தீர்ப்பு

x

தேர்தல் முன்விரோதம் காரணமாக அரசு பேருந்து டிரைவர் உள்பட 2 பேரை கொலை செய்த வழக்கில், போலீஸ்காரர், அரசு ஊழியர் உட்பட 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவெண்ணெய்நல்லூரை அடுத்த கண்ணாரம்பட்டை சேர்ந்தவர் குலசேகரன். அரசு பேருந்து ஓட்டுநரான இவருக்கும், நக்கீரன் என்பவருக்கும் இடையே, கடந்த 2005 ஆண்டு, உள்ளாட்சித் தேர்தலால் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால், 2005ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி காலையில் டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த குலசேகரனை நக்கீரன் தரப்பினர் வெட்டி கொன்றனர். தடுக்க வந்த குலசேகரனின் நண்பர் காத்தவராயனும் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், நக்கீரன் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 6 பேர் விசாரணை காலத்தில் உயிரிழந்தனர். இந்நிலையில், தீர்ப்பு வழங்கிய விழுப்புரம் நீதிமன்றம், உயிரிழந்த 6 பேரைத் தவிர மற்ற 20 பேரையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தனர். மேலும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், கட்ட‌த் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்த நீதிபதி, கொல்லப்பட்டோரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். தண்டனை பெற்றவர்களில் கோவிந்தராஜ் வழக்கறிஞராகவும், மோகன் முதல்நிலை காவலராகவும், சபரிநாதன் பொதுப்பணித்துறை ஊழியராகவும் பணியாற்றி வருகின்றனர். 20 பேருக்கு தீர்ப்பு என்பதால், நீதிமன்ற வளாகத்தில் ஏராளமானோர் குவிந்தனர். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன், 20 பேரையும் பத்திரமாக அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்