"பெருவெளி சிறுவெளியா மாறிவிடும்" ஒன்றாக எதிர்த்து நிற்கும் ஈபிஎஸ், ராமதாஸ் - கொதிக்கும் அன்புமணி

x

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானத்திற்கு எதிர்ப்பு எழுந்திருக்கும் சூழலில், இந்த விவகாரத்தில் நடப்பது என்ன...? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை அமைந்துள்ளது. சத்திய ஞானசபையில், தருமசாலை, அருட்பெருஞ்சோதி மண்டபம் தவிர்த்து மீதமிருக்கும் திறந்த வெளி பெருவெளி என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனம் விழா நடைபெறுகிறது.

2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில்... வள்ளலாரின் கருத்துகளை பரவலாக்கும் விதமாக வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என கூறியது திமுக. அதன்படி, ஆட்சிக்கு வந்ததும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வள்ளலார் சர்வதேச மையம்

அமைக்க பெருவெளி தேர்வு செய்யப்பட்டது.

ஆனால் பெருவெளியில் கட்டுமானம் கூடாது என்ற விமர்சனம் எழுந்தது. பாமக தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டது. வள்ளலார் சர்வதேச மையம் கட்டுவதற்காக முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

மையத்தில் தியான மண்டபம், அருக்காட்சியகம், கலையரங்கம், மின் நூலகம், சன்மார்க்கப் பாடகசாலை, முதியோர் இல்லம், கழிப்பறை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், வெளிநாட்டு மாணவர்கள் ஆய்வு செய்ய ஆய்வகம், அணுகு சாலை வசதிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் மையம் இங்கு அமைந்தால் பெருவெளி சிறுவெளியாக மாறிவிடும், வடலூரில் வேறு பகுதியில் மையத்தை அமைக்கலாம் எனவும் பேசப்பட்டது.

அருட்பெருஞ்ஜோதியை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் கூடும் இடமான பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்கும் பணியை கைவிடுமாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பலகட்ட கருத்துக்கேட்பு கூட்டங்களில் மக்களும், சன்மார்க்க அன்பர்களும் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க ஆதரவு தெரிவித்தார்கள், ஜோதி தரிசனம் பாதிக்காத வகையில் மையத்தை கட்ட திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் சேகர் பாபு குறிப்பிட்டார்.

இந்த சூழலில் அங்கு கட்டுமானப் பணிகள் தொடங்கிய போது, பார்வதிபுரம் கிராம மக்கள் கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்திற்குள் இறங்கி போராட்டம் நடத்தினர்.

தங்கள் முன்னோர் 106 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்ததாகவும், பெருவெளியை சிறு வெளியாக மாற்றக்கூடாது எனவும் குறிப்பிட்டனர். போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நிலத்தை வள்ளலாருக்கு மக்கள் கொடையாக வழங்கிய நோக்கம் அந்த மக்களுக்குதான் தெரியும், வழக்கு நிலுவையில் இருக்கையில் கட்டுமானப் பணியை தொடங்குவது சரியல்ல என விமர்சனம் செய்துள்ளார்.

இந்த சூழலில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருவெளியில் இருக்கும் 71.24 ஏக்கரில், 3.18 ஏக்கர் மட்டுமே மையத்திற்காக பயன்படுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மையத்தை அமைப்பதில் அரசு சரியான பாதையிலேயே செல்வதாக குறிப்பிட்டிருக்கும் அரசு, பக்தர்களுக்கு கூடுதல் வசதியே கிடைக்கும், வள்ளலார் சர்வதேச மையத்தால் தைபூசத்தில் ஜோதி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது எனவும் உறுதியளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்