கந்து வட்டிக் கொடுமையால் பேக்கரி கடை உரிமையாளர் தற்கொலை
கந்து வட்டிக் கொடுமையால் பேக்கரி கடை உரிமையாளர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மதுரை மாவட்டம் கந்தப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா அதே பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். மனைவி மற்றும் மகள்களுடன் வசித்து வரும் ராஜாவுக்குக் கடந்த சில மாதங்களாகத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை சரிகட்ட அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவரிடம் ரூ 30 ஆயிரம் கடன் வாங்கி இருக்கிறார்.கடனை சரிவரக் கட்ட முடியாததால் வினோத், ராஜாவின் வீட்டிற்கு வந்து ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த ராஜாவின் மனைவி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து கடிதம் எழுதி வைத்து இருக்கிறார். இந்த முடிவுக்கு மகள் இருவரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ராஜாவும், அவரது மனைவியும் கடந்த 11 ம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று மயங்கி விழுந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் இருவரையும் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை ராஜா உயிரிழந்ததால் போலீசார் கந்துவட்டி கொடுமை புகாரில் வினோத் உட்பட இருவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் ராஜாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .
