40 கிராமங்களில் கேட்ட பயங்கர சத்தம்.. மறுநொடி வானில் பறந்த வினோதங்கள்.. இதை பரப்பினால் சிறை..

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் வானாபுரம் பகுதியில், 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயங்கர வெடி சத்தம் கேட்ட சம்பவமும், அதனை தொடர்ந்து நடந்தேறிய அடுத்தடுத்த சம்பவங்களும் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது...

கள்ளக்குறிச்சி மாவட்டம் வானாபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான அத்தியூர், கடுவனூர், தொழுவந்தாங்கல், ஏந்தல், மருர், மையனூர், பகண்டைக் கூட்டுச் சாலை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் நண்பகல் நேரத்தில் பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது...

இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள், திடீரென நில அதிர்வு ஏற்பட்டதா..? அல்லது கல் குவாரிகளில் இருந்து ஏற்பட்ட சத்தமா..? என விசாரிப்பதற்குள், வெடி சத்தம் ஏற்படுவதற்கு முன்னதாக வானில் இரண்டு சிறிய ரக ஜெட் விமானங்கள் பறந்ததாகவும், அதன் பின்னரே இந்த பயங்கர சத்தமானது எழுந்ததாகவும், சிலர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் தலைமையிலான காவல்துறையினர், விமான விபத்து எதுவும் நடந்ததா..? அல்லது சத்ததிற்கு வேறு ஏதேனும் காரணங்களா..? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையில் இறங்கினர்.

அந்த வகையில், மையனுர் காட்டுப்பகுதியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக ட்ரோன் வீடியோ மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், தீயணைப்புத் துறையினர், வருவாய்த் துறையினர் ஆகியோருக்கும் தகவல் அளித்ததை அடுத்து, அவர்களும் ஒரு பக்கம் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

இந்த பரபரப்பான சூழலுக்கு நடுவே மையனுர் காட்டுப் பகுதியில், கெருட மலை மேல் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த வைகுண்ட பெருமாள் கோவிலில் பயங்கர வெடி சத்தம் கேட்டதை அடுத்து, அப்பகுதி மக்கள் கூட்டாக அங்கு சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர்...

கோவில் கதவு திறக்கப்பட்டு, உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனடியாக பகண்டை கூட்டு சாலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், உண்டியலில் தங்கம், வெள்ளி உள்ளிட்டவை இல்லாததால், அதில் இருந்த 3 ஆயிரம் ரூபாயை மட்டும் திருடர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இந்நிலையில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயங்கர சத்தம் கேட்டதும், அதனை தொடர்ந்து கோவில் உண்டியல் திருடப்பட்ட சம்பவமும், அப்பகுதி மக்களை கலக்கம் அடைய செய்த நிலையில், எவ்வித அசம்பாவிதங்களும் நடக்கக் கூடாது என வேண்டி, கோவிலில் சிறப்பு பூஜை செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.

இத்தகைய பரபரப்பான சம்பவங்களுக்கு மத்தியில், போலீசார் தொடர் விசாரணையில் தீவிரம் காட்டி வருகின்றனர். சத்ததிற்கான உண்மையான காரணம் தெரிய வரும் போதுதான் நிம்மதி பெருமூச்சு விடமுடியும் என்பது அப்பகுதி மக்களின் தற்போதைய மனநிலையாக உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்