"ரூட் தல"-களால் அதிர்ந்த ரயில் நிலையம் - நொந்து போன மக்கள் - திணறிய ரயில்வே போலீசார்

"ரூட் தல"-களால் அதிர்ந்த ரயில் நிலையம் - நொந்து போன மக்கள் - திணறிய ரயில்வே போலீசார்
x

பொன்னேரி தனியார் கல்லூரி மாணவர்கள் ரயில் நிலைய நடைமேடையில் மேள தாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து கொண்டாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பிண்ணனி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

குதூகலமாய் கல்லூரி மாணவர்கள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருப்பது ஏதோ கோயில் திருவிழாவிலோ...கல்லூரி ஆண்டு விழாவிலோ அல்ல...எந்நேரமும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் ரயில் நிலையத்தில் கல்லூரி ஆண்டு விழாவை முன்னிட்டு பொன்னேரி தனியார் கல்லூரி மாணவர்கள் அரங்கேற்றிய இந்த அட்டகாசத்தால் நேற்று காலை கும்மிடிப்பூண்டி ரயில் நிலையமே ஆடிப் போனது ரயில் நிலைய நடைமேடையில் மேள தாளங்கள் முழங்க...பட்டாசு வெடித்து...ஆட்டம் போட்ட கல்லூரி மாணவர்களை, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ராஜேஷ்குமார் அப்புறப்படுத்த முயன்றார்.

ஓவராக ஆட்டம் போட்ட ஒரு கல்லூரி மாணவனின் கையைப் பிடித்த பாதுகாப்புப் படை வீரரை அப்படியே பின்னோக்கி மாணவர் கூட்டம் இழுத்துச் சென்றது. இது கூடப் பரவாயில்லை...அருகே துணைக்கு நின்றிருந்த மற்றொரு பாதுகாப்புப் படை வீரரின் கையைப் பிடித்து மாணவர் ஒருவர் இழுக்கவே ஏழரை கூடியது. சரி இதற்கு மேல் விட்டால் சரிப்பட்டு வராது என்று பாதுகாப்புப் படை வீரர்கள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்குள் மொத்த மாணவர் கூட்டமும் கும்மிடிப்பூண்டியில் இருந்து வேளச்சேரி செல்லும் ரயிலில் தப்பிச் சென்றது. இவர்களை இப்படியே விடக்கூடாது என்று ரயில் பின்னாலேயே ரயில்வே அதிகாரிகளும் துரத்திச் சென்றனர்.

பொன்னேரி ரயில் நிலையத்தில் அந்த மாணவர் கும்பல் இறங்கியது..."கும்மிடிப்பூண்டி ரூட்"...நாங்க அடக்கி ஆண்ட கூட்டம்...அடங்கிப் போக மாட்டோம்" என்று வீரவசனங்கள் எல்லாம் எழுதி...கல்லூரி பெயர் பொறிக்கப்பட்ட பேனரை ரயிலில் கட்டி, அங்கும் பயங்கர அலம்பல் கொடுத்துள்ளனர். ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் அந்தக் கூட்டத்தை சுற்றி வளைத்து, பிரச்சினைக்கு முக்கிய காரணமான 7 மாணவர்களைக் கொத்தாகத் தூக்கி விட்டனர். அந்த 7 மாணவர்கள் மீதும், ரயில்வே சட்டத்தின் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் சிறையில் அடைத்துள்ளனர்.

பாவம் மாணவர்கள்தானே என்ற கரிசனத்தோடு இந்தச் சமூகம் பல பஸ்டேக்களையும் கானா களேபரங்களையும் கடந்து சென்று விடுகிறது. ஆனால், அதுவே எல்லை மீறும் போது இது போன்ற தண்டனைகள் அவசியம்தான்!

"ரூட் தல"-களால் அதிர்ந்த ரயில் நிலையம் - நொந்து போன மக்கள் - திணறிய ரயில்வே போலீசார்


Next Story

மேலும் செய்திகள்