ஒன்று கூடிய பிரபல தாதாக்கள்.. ஸ்பாட்டில் கொத்தாக சிக்கிய 20 ரவுடிகள்.. தட்டி தூக்கிய காவல்
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பாம் சரவணன் மீது 5க்கும் மேற்பட்ட கொலை வழக்கு, வெடிகுண்டு வீச்சு, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாம் சரவணனை அதிதிவீர குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், திருமங்கலத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் அவர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சுமார் 15க்கும் மேற்பட்ட போலீசார், நட்சத்திர விடுதிக்கு சென்ற நிலையில், அங்கு பாம் சரவணன் உட்பட தமிழகத்தில் உள்ள A ப்ளஸ் ரவுடிகள் 30க்கும் மேற்பட்டோர் கூடியிருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். போலீஸார் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்ததை பார்த்த ரவுடிகள் அனைவரும், நாலாபுறமாக சிதறி ஓடிய நிலையில், 20 ரவுடிகளை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட ரவுடிகளிடம் இருந்து 3 கள்ளத் துப்பாக்கிகள், 16 தோட்டாக்கள் மற்றும் 11 கத்தி, 5 சொகுசு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், ரவுடிகள் மீதான நடவடிக்கை தொடரும் என தெரிவித்தார்.
