கருவில் சிசு ஆணா? பெண்ணா?... மொபைலில் ஸ்கேன்.. சிக்கிக்கொண்ட சிசுவின் தலை - பகீர் சம்பவம்

x


கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக மொபைல் ஸ்கேன் மூலம் கண்டுபிடித்து கருக்கொலையில் ஈடுபட்ட 7 பேரை தருமபுரி போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி அருகே செந்தில் நகர் குடியிருப்பு பகுதியில் கற்பகம் என்ற செவிலியர் வசித்து வருகிறார். தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த 2 ஆண்டுகளாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

கையில் பணம் இல்லாமலும், வேலை இல்லாமலும் அவதிப்பட்டு வந்துள்ளார் கற்பகம். இந்த நிலையில் திருப்பத்தூரில் தனியார் ஸ்கேன் சென்டர் நடத்தி வரும் சதீஷ்குமார் என்பவர் மொபைல் ஸ்கேன் கருவியை வைத்துக் கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சோதனை செய்து வந்துள்ளார். அதேநேரம் சட்டவிரோதமாக குழந்தையின் பாலினத்தையும் அவர் பெண்களிடம் சொல்லி பணம் பறித்து வந்துள்ளார்.

இவர்களின் தொழிலுக்கு இடைத்தரகர்கள் பலரும் உதவி வந்துள்ளனர். ஜோதி, சரிதா, குமார், வெங்கடேசன் ஆகிய இடைத்தரகர்கள் இவர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.. இவர்களோடு செவிலியர் கற்பகமும் சேர்ந்து கொண்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக கிருஷ்ணகிரியை சேர்ந்த வனஜா என்ற பெண் கருவுற்றுள்ளார். ஏற்கனவே 2 பெண் குழந்தைகளுக்கு தாயாக இருந்த அவர் மீண்டும் கருவுறவே, குழந்தையின் பாலினம் குறித்து முன்கூட்டியே சொல்வதாக சிலர் வனஜாவை அணுகி உள்ளனர்.

பின்னர் இடைத்தரகர் வெங்கடேசன் வீட்டிற்கு கண்ணை கட்டி வனஜாவை அழைத்துச் சென்று மொபைல் ஸ்கேன் கருவி வைத்து சோதனை நடந்துள்ளது. அப்போது கருவில் இருப்பது பெண் குழந்தை என உறுதியாகவே, அதை அழிக்க வனஜாவும் ஒப்புக் கொண்டுள்ளார். இதற்காக கணிசமாக ஒரு தொகையும் கடந்த 12 ஆம் தேதி பேசப்பட்டது. பின்னர் அதே பாணியில் கண்ணை கட்டி வனஜாவை தருமபுரி பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுள்ளனர்.

14 ஆம் தேதி பணத்துடன் வந்த வனஜாவிற்கு கருக்கலைப்பு செய்யும் போது சிசுவின் தலையானது சிக்கிக் கொண்டது. இதில் வனஜா அலறித்துடிக்கவே அந்த கும்பல் அவரை அப்படியே அவரது வீட்டில் இறக்கி விட்டு விட்டு தப்பிச் சென்றது. உடனடியாக வனஜாவின் உறவினர்கள் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து உயிரை காப்பாற்றினர்.

இந்த விவகாரம் சுகாதாரத்துறை மற்றும் போலீசார் கவனத்திற்கு கொண்டு சென்ற போது வனஜாவின் செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் துப்பு துலக்கினர். அப்போது கருக்கலைப்பு செய்வதை போல பேசிய போலீசார் அந்த கும்பலை நெருங்கினர்.

அப்போது அங்கே இருந்த செவிலியர் கற்பகம், ஸ்கேன் சென்டர் நடத்தி வந்த சதீஷ்குமார், இடைத்தரகர்கள் என 7 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து ஒரு சொகுசு கார், ஒரு ஆட்டோ, மொபைல் ஸ்கேன் மிஷின் மற்றும் 17ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது.. இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்