5 வருடம் கழித்து சந்தித்த நண்பர்கள்-காட்டு யானையோடு சேர்ந்த கும்கி-நீலகிரியில் பரபரப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர் - பந்தலூர் பகுதிகளில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்ட வந்த கும்கி யானை மீது கடும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
காட்டு யானைகள், ஊருக்குள் வராமல் தடுக்க முதுமலையிலிருந்து விஜய், வசீம், பொம்மன், சீனிவாசன் போன்ற நான்கு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. குறிப்பாக காட்டு யானைகளை விரட்டுவதற்காக வந்த சீனிவாசன் என்ற கும்கி யானை, கட்டை கொம்பன் உடன் கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு ஒன்றாக பழகிய யானை ஆகும். இந்நிலையில், வழக்கம் போல அதிகாலை கட்டுக்கொம்பன் யானை ஊருக்குள் வர முயற்சி செய்தது. அப்போது இந்த நான்கு கும்கி யானைகளும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக சென்றது. அப்பொழுது பழைய நண்பன் சீனிவாசனை பார்த்த கட்டை கொம்பன் வேகமாக வந்து வனத்துறையினரை விரட்டி விட்டு தனது பழைய நண்பன் சீனிவாசனை அழைத்துக் கொண்டு வனப்பகுதிக்கு சென்றது. நீண்ட நேரம் சீனிவாசன் யானையை பிரித்து அழைத்து வர வனத்துறையினர் போராடினர். இதனால் கோபமடைந்த கட்டை கொம்பன் பழைய நண்பனான சீனிவாசனை கடுமையாக தாக்கியது. இதில் சீனிவாசன் யானையின் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. பின்னர் வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி சீனிவாசன் யானையை அழைத்து வந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
