ரூ.5 முதல் ரூ.45 வரை.. சுங்கக் கட்டணம் உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

x

தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளில், சுங்கக் கட்டணம் உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில், பல சுங்கச் சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதியும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ஆம் தேதியும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 54-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. மீதமுள்ள 20-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இந்த முறை மதுரை, திண்டுக்கல், திருச்சி, மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, தூத்துக்குடி, எலியார்பத்தி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில், 5 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் அல்லது சாலை அமைத்த முதலீடு திரும்பப் பெறும் வரை கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், அதன்பிறகு 40 சதவீத சாலை பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளன. ஆனால், ஆண்டுதோறும் சுங்க கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும், 60 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள வானகரம், சூரப்பட்டு, பரனூர், ஆத்தூர், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, வாணியம்பாடி, உட்பட 22 சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும், ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்