மீனவ கிராமங்களை மட்டுமே டார்கெட்! - தொடரும் நிதி நிறுவன மோசடி! வெளிநாட்டில் தலைமறைவான நிறுவனத்தினர்
நாகையில் மீனவ கிராமங்களை மட்டும் குறிவைத்து சுமார் 22 கோடி ரூபாய் பண மோசடி செய்து, பிரான்ஸ் தப்பியோடிய நிதி நிறுவனத்தினர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த முகமது அலி என்பவர், கடந்த 2012-ஆம் ஆண்டில் நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். நாகை, நாகூர், மயிலாடுதுறை மற்றும் தரங்கம்பாடி போன்ற பகுதிகளை சேர்ந்த 8 செல்வந்தர்களை நிறுவனத்தின் இயக்குநராக நியமித்த முகமது அலி, கடலோர மீனவ கிராமங்களை மட்டும் குறிவைத்து, சுமார் 7 ஆயிரம் பேரிடமிருந்து, 22 கோடி ரூபாய் பணம் மோசடி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலீடு பணத்தை இரட்டிப்பாக தருவதாக கூறி, கடைசியில் நிறுவனம் மோசடி செய்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த மக்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வந்த நாகை போலீசார், நிறுவன உரிமையாளர் முகமது அலி உட்பட 9 பேர் மீது வழக்குபதிவு செய்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் தலைமறைவாக உள்ள அனைவரையும் கைது செய்ய மும்முரம் காட்டி வருகின்றனர்.