அதிகார மமதையில் சிக்கிய அஸ்வினி.. தாலியை பறித்து தலைகால் புரியா ஆட்டம்.. லெக் தாதாவை கவ்விய சூது

x

கடந்த 2021ம் ஆண்டு, மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயிலில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவமதிக்கப்பட்டதாக, அஸ்வினி என்ற நரிக்குறவ பெண் தனது மனக்குமுறலை வீடியோவாக வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதை அடுத்து, ஒரே நாளில் தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தார் நரிக்குறவ பெண் அஸ்வினி...

எந்த கோயிலில் நரிக்குறவ மக்களுக்கு அன்னதானம் மறுக்கப்பட்டதோ, அதே கோயிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு, வீடியோ வெளியிட்ட நரிக்குறவ பெண்ணுடன் அன்னதான நிகழ்ச்சியில் அமர்ந்து உணவு அருந்தினார்.

அதுமட்டுமா... இந்த விவகாரம் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியவர, உடனடியாக அஸ்வினி வசிக்கும் பூஞ்சேரி கிராமத்திற்கு விரைந்து சென்ற அவர், நரிக்குறவ இன மக்களை சந்தித்து, வீட்டுமனைப் படடா, குடும்ப அட்டை என நலத்திட்ட உதவிகளை வாரி வழங்கினார்...

மேலும், அஸ்வினி வீட்டிற்கும் சென்று கலந்துரையாடிய முதல்வர், அந்தப் பெண்ணுக்கு, மாமல்லபுரம் கடற்கரை சாலையில் கடை ஒன்றும் அமைத்து கொடுக்க ஏற்பாடு செய்தார்.

ஆனால், முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வந்து சென்ற பின்னர், அஸ்வினியின் நடவடிக்கைகளோ வெகுவாக மாறின.

கங்கா கொஞ்சம் கொஞ்சமாக சந்திரமுகியாக மாறிய திரைப்பட வசனம் போல, தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, அந்தப் பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகார போதை மிக்கவராக மாறினார் அஸ்வினி...

நரிக்குறவ பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கடனாக வாங்கித் தர, 20 ஆயிரம் ரூபாய் கமிஷன் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், வங்கியில் அஸ்வினி கூச்சலிட்டு கலாட்டாவில் ஈடுபட்டது.

அதேபோல், முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் பெயரை சொல்லி, உணவகங்களில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் மிரட்டியது என சொர்ணா அக்கா ரேஞ்சுக்கு அஸ்வினியின் அலப்பறைகள் அதிகரித்தன.

அஸ்வினியின் மிரட்டல்களால், கோபத்தின் உச்சிக்கே சென்ற கடை உரிமையாளர்கள், நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து அப்போது பரபரப்பையும் ஏற்படுத்தினர்.

எதற்கும் அசைந்து கொடுக்காத அஸ்வினி, தனது வழக்கமான பாணியிலேயே அதிரடியாக வலம் வர, அவர் மீது கொலை மிரட்டல் வழக்கு ஒன்றும் காவல்நிலையத்தில் பதியபட்டிருந்தது.

இந்த நிலையில், மீண்டும் பிரச்சினையை கிளப்பி சிக்கலில் சிக்கியுள்ளார் அஸ்வினி...

திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் பகுதியை சேர்ந்த நதியா என்ற பெண், மாமல்லபுரம் கடற்கரை சாலையில் கடை விரித்து பாசிமணி வியாபாரம் செய்துள்ளார்.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அஸ்வினி, கொத்திமங்கலத்தில் இருந்து இங்கு வந்து எப்படி கடை வைக்கலாம் என அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அஸ்வினி, நதியாவை தான் வைத்திருந்த பேனா கத்தியால், தோள்பட்டை மற்றும் வயிற்றுப் பகுதியில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த நதியாவிற்கு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

நதியா, தாக்குதலுக்கு உள்ளானவர்

"கத்தியால் குத்தியதில் காயம்"

"மருத்துவமனையில் 10 தையல்கள் போட்டிருக்காங்க"

"கழுத்தில் இருந்த 3 சவரன் தாலியை பறிச்சுட்டாங்க"

இதுதொடர்பான புகாரில், பூஞ்சேரி பகுதியில் இருந்த அஸ்வினியை போலீசார் கைது செய்து, அவர் மீது கொலை முயற்சி வழக்கை பதிவு செய்தனர். அதன்பின்னர் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, வரும் 30ம் தேதி வரை சிறையில் நீதிபதி உத்தரவிட்டார்.

ஒரே இரவில் கோடீஸ்வரனாக மாறியவருக்கு, பணத்தின் அருமை தெரியாது என்பது போல, ஒரே ஒரு வீடியோவை வெளியிட்டு பிரபலமடைந்த நரிக்குற பெண் அஸ்வினி, கிடைத்த மரியாதையை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே அவரது செயல்கள் உணர வைத்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்