ஈ.பி.எஸ்க்கு வந்த அழைப்பு... ஓ.பி.எஸ்.க்கு பின்னடைவா? - அனல் பறக்கும் அதிமுக விவகாரம்
ஈ.பி.எஸ்க்கு வந்த அழைப்பு... ஓ.பி.எஸ்.க்கு பின்னடைவா? - அனல் பறக்கும் அதிமுக விவகாரம்
அதிமுக கட்சி விவகார சட்ட போராட்டங்களின் அடுத்தடுத்த நகர்வுகள் ஈ.பி.எஸ்க்கு சாதகமாக அமைந்து வரும் நிலையில், தேர்தல் ஆணையமும், ஆலோசனை கூட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளது ஓ.பி.எஸ் தரப்பை கவலையடைய செய்துள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்த பின்னர் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி வருகிறது. பெருவாரியான நிர்வாகிகள் ஆதரவுடன் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக் கிறார்.
கட்சியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி. மற்றும் அவர்களது ஆதரவாளர்களை அதிரடியாக நீக்கியிருக்கிறார். இதுபோன்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை நீக்கும் ஓ.பன்னீர் செல்வம், தேர்தல் ஆணையம், நீதிமன்றத்தை நாடிவருகிறார்.
நீதிமன்றத்திலும் அவருக்கு தொடர்ந்து பின்னடைவே ஏற்பட்டு வருகிறது. அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க ஓ.பன்னீர்செல்வம் கோரியிருந்த போது, கடந்த 11 ஆம் தேதி காலையில் அதனை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அன்றைய தினம் நடந்தது. இதற்கு எதிராக மீண்டும் உச்சநீதிமன்றம் சென்றார் ஓ.பன்னீர் செல்வம்... ஆனால் உச்சநீதிமன்றம் பொதுக்குழு மற்றும் தீர்மான விவகாரங்களில் தலையீடாது, ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து 3 வாரங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும்; அதுவரை அ.தி.மு.க.வில் தற்போதுள்ள நிலையே நீடிக்கும் என உத்தரவிட்டது.
இதுவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இதற்கிடையே வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது பற்றி ஆலோசிக்க, ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆணையம் சார்பில் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்காத பட்சத்திலும், ஓ.பன்னீர்செல்வமும் கூட்டத்தில் அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் பங்கேற்பார் என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
தர்மயுத்தத்திற்குபின் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ் அணிகள் இணைந்தாலும், மனங்கள் இணையவில்லை என்றுதான் சொல்லவேண்டும்...இருவருக்குள்ளும் ஒரு பனிப்போர் நடந்துகொண்டுதான் இந்தது.
ஒரே சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர ஓ.பி.எஸ் முயற்சிப்பதாகவும் அதுவும் இவர்களுக்கிடையேயான மோதல் போக்கு அதிகரிக்க காரணம் என்றும் கூறப்பட்டது. இந்த கூற்றை உறுதி செய்வது போலவே, அமைந்திருந்தது ஓ.பன்னீர்செல்வத்தின் சசிகலா ஆதரவு கருத்துக்கள்.
இந்த நிலையில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதே செல்லாது என்கிறபோது அவர் ஓ. பன்னீர்செல்வத்தை நீக்கியது எப்படி செல்லும் என்ற கேள்வியை முன்வைத்திருக்கிறார் சசிகலா.