ரயில் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, 2 மகள்கள் பரிதாப பலி

x

உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயை பார்க்கச் சென்றபோது நிகழ்ந்த மனதை உலுக்கும் சம்பவம்...

தண்டவாளத்தை கடக்கும் போது அதிவேகத்தில் வந்த ரயில் மோதியதில், தந்தை தனது 2 மகள்களுடன் உயிரை விட்டது குடும்பத்தையே நிலைகுலைய வைத்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே பெருமாள்பட்டு ரெட்டை குளம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவருக்கு, 18 வயதில் தர்ஷிணி மற்றும் தாரணி என 2 மகள்கள் இருந்தனர்.

உடல்நலக்கோளாறு காரணமாக, சென்னை இஎஸ்ஐ மருத்துவமனையில் மனோகரனின் மனைவி அனுமதிக்கப்பட்டுள்ளார். 2 மகள்களுடன் மருத்துவமனையில் உள்ள தாய்க்கு உதவிகரமாக இருந்த நிலையில், தனது தந்தையுடன் வீட்டிற்கு வந்த மகள்கள், உணவை சமைத்துக் கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு புறப்பட்டுள்ளனர்.

வேப்பம்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்தபோது, 3 பேரும் தண்டவாளத்தை கடந்துள்ளனர். ஆனால், சற்று நிதானம் தவறியதன் விளைவு, அந்த நேரத்தில் ஆக்ரோஷமாக வந்த ரயிலை பார்க்கத் தவறவிட்டதுதான் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தண்டவாளத்தை கடக்கும் போது, அதிவேகத்தில் வந்த ரயில் மோதியதில், தந்தையும், 2 மகள்களும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குடும்பத்தையே நிலைகுலைய வைத்துள்ளது.

விபத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள், உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார், 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே விபத்தில், ஒரு குடும்பமே சிதைந்து போன தருணம், உறவினர்களை சோகக் கடலில் மூழ்க வைத்துள்ளது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக, வேப்பம்பட்டு ரயில் நிலைய மேம்பால பணிகள் பாதியிலேயே நிறுத்தி வைத்ததே விபத்திற்கான காரணம் என கோபமடைந்த பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் அதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மறியல் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

அப்போது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் வட்டாட்சியர் சுரேஷ்குமார் என்பவர், மறியலில் ஈடுபட்டவர்களை பேச்சுவார்த்தை நடத்தி, மாற்றுப்பாதை அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயை பார்க்கச் சென்ற தந்தை மற்றும் 2 மகள்கள் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்