"நளினிக்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியும்" - உயர் நீதிமன்றம் கேள்வி
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை கைதியாக உள்ள நளினிக்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் ஜாமின் வழங்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிய முந்தைய அதிமுக அரசு, அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தது. நீண்ட காலமாக அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்ததால், ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் தன்னை முன்கூட்டி விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சக கைதியான பேரறிவாளன் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. அந்த வழக்கில் முடிவு காணப்பட்ட பின் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கலாம் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்திருந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளதாக கூறி உத்தரவு நகல், தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, எந்த மேல் முறையீட்டு வழக்கும் நிலுவையில் இல்லாத நிலையில் எந்த சட்டப்பிரிவின் கீழ் ஜாமின் கோர முடியும் என நளினி தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். உச்ச நீதிமன்றம் அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலானது எனவும், உயர் நீதிமன்றத்தால் ஜாமின் வழங்க முடியாது எனவும் கூறிய தலைமை நீதிபதி, மனுதாரர் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தை தான் அணுக முடியும் எனவும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டமல்ல எனவும் தெரிவித்தனர். கருனை மனு நிலுவையில் உள்ள நிலையில் ஜாமின் கோரலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நளினி தரப்பு வழக்கறிஞர், அந்த உத்தரவு நகலை தாக்கல் செய்ய அவகாசம் கோரியதை ஏற்று, மனு மீதான விசாரணையை மார்ச் 24 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
Next Story