அரசு பணிக்காக தந்தையை மார்பில் மிதித்தே கொன்ற மகன்!
அரசு பணிக்கு ஆசைப்பட்டு, தந்தைக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்ததுடன், மார்பில் மிதித்தே கொலை செய்த மகனின் கொடூர செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் திடீர் நகரை சேர்ந்தவர் கருப்பையா. 60 வயதான இவர், கீரனூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை பணியாளராக, பணி செய்து வந்துள்ளார். இந்த மாதம், வருகிற 31 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற இருந்த கருப்பயைா, கடந்த 18 ஆம் தேதி கீரனூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகே சடலமாக கிடந்துள்ளார். முதலில் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்திருக்கிறார் என பலரும் எண்ணிய நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் உண்மை வெளி வந்தது. கருப்பையாவின் மரணம், கொலை எனவும், உடலில் விஷம் கலந்துள்ளதாகவும், மார்பு பகுதியில் கடுமையாக மிதித்தாலேயே கருப்பையா உயிரிழந்ததும் பரிசோதனையின் முடிவில் தெரிய வந்துள்ளது இதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய கீரனூர் போலீசார், கருப்பையாவின் மகன் பழனியிடம் கிடுக்குப்பிடி விசாரணையை தொடங்கினர். இதில், தந்தையின் தூய்மை பணியாளர் பணிக்கு ஆசைப்பட்டு, மகன் பழனியே, தனது நண்பர் ஆனந்துடன் சேர்ந்து, தந்தையை கொலை செய்தது தெரியவந்தது. மதுவில் குருணை மருந்தை கலந்து தந்தைக்கு கொடுத்துள்ளார், பழனி. அதை குடித்த கருப்பையா மயங்கி விழுந்த நிலையில், அவரது மார்பில் மிதித்தே கொலை செய்ததாகவும் போலீசாரிடம் இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து கருப்பையாவின் மகன் பழனி மற்றும் அவரது நண்பர் ஆனந்தனை கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Next Story