"பாஜக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்"

தமிழக மீனவர் பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.
x
தமிழக மீனவர் பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார். 

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவா பங்கேற்று உரையாடினார்.
அப்போது பேசிய அவர்,  குடியரசுத் தலைவரின் உரையில் திருக்குறள் உள்ளிட்ட ஒரு சில அம்சங்களைத் தவிர பாராட்டும்படியான அம்சம் எதுவும் இல்லை என குறிப்பிட்டார்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசு மக்களுக்காக பணியாற்றுவோம் என, அளித்த வாக்குறுதியை மறந்து விட்டது என குற்றம் சாட்டினார். மத்திய அரசின் அனைத்து கொள்கைகளும் கூட்டாட்சி தத்துவத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் எதிராக இருப்பதாக குறிப்பிட்ட திருச்சி சிவா,  2014 முதல் தற்போது வரை மத்திய அரசு பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி விதிப்பின் மூலம் 25 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது எனவும் எடுத்துரைத்தார். ஆனால் விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை என திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றம் சாட்டினார். அடிப்படையில் விவசாயத்தை ஆதாரமாகக் கொண்ட இந்த நாடு தற்போது கார்ப்பரேட்டுகளின் நாடாக மாறிவிட்டது என விமர்சித்தார். 2022 ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என அரசு வாக்குறுதி கொடுத்த நிலையில் இதுவரை விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக வில்லை என புகார் கூறினார். அண்மையில் தமிழக மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படை கைது செய்து அவர்களின் படகுகளை சிறைப்பிடித்து இருப்பதை சுட்டிக் காட்டிய அவர், தமிழக மீனவர்களின் துயரம் தொடர்கதையாகி வருவதாகவும், இதற்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார்.
மக்கள் அனைவரும் இன்னும் 2 ஆண்டுகளில் பாஜக அரசுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் திமுக எம்.பி. திருச்சி சிவா எச்சரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்