"ஆதாரம் இல்லாமல் வழக்கா?" - அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

"ஆதாரம் இல்லாமல் வழக்கா?" - அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்
x
ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிகளின் சொத்துக்களை முடக்க கோரி எந்த ஆதாரங்களும் இல்லாமல் வழக்கு தொடர்ந்ததற்காக, மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவருக்கு 2 ஆண்டுகள் பொது நல வழக்கு தொடர தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டதாகவும், பிறப்பு முதல் இறப்பு சான்று பெறுவது வரை லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாக கூறி, அனைத்து அலுவலகங்களிலும், லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என விளம்பர பலகை வைக்க கோரி மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் அந்த மனுவில், ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகும் அரசு அதிகாரிகளின் அசையும், அசையா சொத்துக்களை முடக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, பொதுப்படையான கோரிக்கைகளுடன், எந்த ஆய்வும் நடத்தாமல் விளம்பரத்துக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி, வழக்கை 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு பொது நல வழக்குகள் தாக்கல் செய்ய மனுதாரருக்கு தடை விதித்த நீதிபதிகள், அபராதத் தொகையை 15 நாட்களில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்தவும் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்