பெற்ற மகளிடம் அத்துமீறிய தந்தை - மானம் காக்க தாய் எடுத்த முடிவு

சென்னையில் பெற்ற மகளிடம் அத்துமீறிய கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
x
சென்னையில் பெற்ற மகளிடம் அத்துமீறிய கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணி குறித்து விவரிக்கும் செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.....

சென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் பிரதீப். இவருக்கு திருமணமாகி 20 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதில் மகள் கல்லூரியில் படித்து வருகிறார். வேலை இல்லாத பிரதீப், தன் தந்தைக்கு சொந்தமான இடத்தில் வசித்து வருகிறார். 

குடிபோதைக்கு அடிமையான இவர், தன் பிள்ளைகளையும், மனைவியையும் அடிக்கடி துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த பிரதீப், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தன் மகளிடம் அத்துமீற முயன்றதாக தெரிகிறது. அப்போது மகளின் சப்தம் கேட்டு வந்த பிரதீப்பின் மனைவி, கணவரை உடனே வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் போதையில் இருந்த பிரதீப், கோபத்தில் மனைவி மற்றும் பிள்ளைகளை கடுமையாக தாக்கி உள்ளார். அப்போதும் தன் மகளை அவர் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது. 

இதனால் அதிர்ந்து போன சிறுமியின் தாய், வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து பிரதீப்பின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நடந்ததை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரதீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், பிரதீப்பின் மனைவி மற்றும் பிள்ளைகளிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது நடந்த சம்பவங்களை எல்லாம் பிரதீப்பின் மனைவி போலீசில் தெரிவித்தார். தற்காப்புக்காக செய்த கொலை என்ற அடிப்படையில் வழக்கு பிரிவை 302ல் இருந்து 100க்கு மாற்றிய போலீசார் அவரை விடுவித்தனர். 
இதற்கு முன்பாக திருவள்ளூரில் இளம்பெண் ஒருவர் இதுபோல் கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் ஒரு சம்பவம் சென்னையில் நடந்திருக்கிறது...

Next Story

மேலும் செய்திகள்