விருதுநகருக்கு அழைத்து வரப்பட்டார் ராஜேந்திர பாலாஜி - போலீசார் விடிய விடிய விசாரணை

3 கோடி ரூபாய் பண மோசடி புகார் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் போலீசார் விடிய விடிய 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
x
ஆவின் நிறுவனத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் 3 கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்து விட்டதாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவரது ஜாமின் மனு உயர்நிதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவான ராஜேந்திரபாலாஜியை 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் பல்வேறு ஊர்களில் தேடி வந்தனர். 

20 நாட்களாக தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி கர்நாடக மாநிலம் ஹசனில் காரில் சென்ற போது தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் வேன் மூலம் அவரை விருதுநகருக்கு போலீசார் நள்ளிரவில் அழைத்து சென்றனர். மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட ராஜேந்திரபாலாஜியிடம்  மதுரை சரக டி.ஐ.ஜி காம்னி தலைமையில் போலீசார் 3 மணி  நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ராஜேந்திர பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதையடுத்து அவரை  போலீசார் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றனர்.
இதேபோல் ராஜேந்திர பாலாஜியுடன் உடனிருந்ததாக கைது செய்யப்பட்ட அவரது தங்கை மகன் கணேசன், விருதுநகரை  சேர்ந்த  பாண்டியராஜன் , ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்ததாக  கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக  செயலாளர் ராமகிருஷ்ணன், அவரது உறவினர் நாகேஷன் 
ஆகிய 4 பேரையும்  தனிப்படை போலீசார் கைது செய்தனர். அனைவரையும் விருதுநகர் மாவட்ட காவல்துறை குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு 
போலீசார் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்