ஆன்லைன் மூலம் சூதாட்டம்; சிக்கிய கும்பல் - மோசடியில் ஈடுபட்ட 9 பேர் கைது
கள்ளக்குறிச்சியில் ஆன்லைன் மூலம் சூதாட்டம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சியில் ஆன்லைன் மூலம் சூதாட்டம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியில் உள்ள கிருஷ்ணா நகரில் ஆன்லைன் மூலமாக சூதாட்டத்தில் சிலர் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜலட்சுமி தலைமையில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். உள்ளே சென்று பார்த்த போது, கம்ப்யூட்டரை வைத்துக் கொண்டு சிலர் ஆன்லைனில் செயலியை பயன்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. மேலும் செல்லம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தலைமையில் வீடு வாடகைக்கு எடுத்து இந்த சூதாட்டம் நடந்து வந்ததும் உறுதியானது. இதையடுத்து அங்கிருந்த மணிகண்டன் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 6 கம்ப்யூட்டர்கள், எல்இடி டிவி, கார், 400 சிம்கார்டுகள், 20 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். ஏற்கனவே திட்டமிட்டு புரோகிராமிங் செய்த விளையாட்டை இளைஞர்களை பணம் கட்டி விளையாட அழைத்து கடைசியில் அவர்களிடம் பணம் பறிக்கும் செயலில் இந்த கும்பல் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற மோசடியான சூதாட்டங்களில் பணத்தை இழப்பதால் தற்கொலை உள்ளிட்ட நிகழ்வுகள் அரங்கேறி வருவதாக கூறும் போலீசார், இதுகுறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.
Next Story