பொன்விழா ஆண்டில் அதிமுக - அதிமுகவில் ஜெயலலிதா ஆளுமை

பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுகவில், எம்ஜிஆருக்கு பின்னர் ஜெயலலிதாவின் ஆளுமை குறித்து ஒரு தொகுப்பை பார்க்கலாம்...
பொன்விழா ஆண்டில் அதிமுக - அதிமுகவில் ஜெயலலிதா ஆளுமை
x
எம்.ஜி.ஆரை போலவே திரையுலகில் வெற்றிப்பாதையில் பயணித்த ஜெயலலிதா, 1982 ஜூன் 5 ஆம் தேதி எம்.ஜி.ஆர். முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 

எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டத்தை மேற்பார்வையிடும் உயர்மட்ட கமிட்டி  உறுப்பினரான ஜெயலலிதா, 1983 ஆம் ஆண்டு அதிமுக கொள்கை பரப்பு செயலளாராகவும், 1984 ஆம் ஆண்டு கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராகவும் உயர்ந்தார்.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி என்ற பன்மொழி ஆளுமை அரசியலில் ஜெயலலிதாவுக்கு சிறப்பான இடத்தை பெற்று தந்தது. கட்சி பொதுக்கூட்டங்களில் அவருடைய ஆவேச பேச்சு பொதுமக்களை வெகுவாக ஈர்த்தது. 

எம்.ஜி.ஆர். மறைவையடுத்து கட்சி பிளவுப்பட்டு,  இரட்டை இலை முடக்கப்பட்டது. ஜெயலலிதா தலைமையில் செயல்பட்ட அணி சேவல் சின்னத்தில் களமிறங்கி 1989 சட்டப்பேரவை தேர்தலில் 27 இடங்களை வென்றது. 

"கட்சி காணாமல் போய்விடும் என்றார்கள்"
"இயக்கத்தை ஒன்றிணைத்தார் ஜெயலலிதா"
"இரட்டை இலை சின்னத்தை மீட்டார்"
"1991ல் அதிமுக அமோக வெற்றி"

அதே ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, காங்கிரஸ் கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் 39 இடங்களில் வென்றது. தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றார் ஜெயலலிதா. 

1991 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, காங்கிரஸ் கூட்டணி 234 இடங்களில் 224 இடங்களை வென்றது. 39 நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றியது.

பெரும்பான்மையுடன் முதல்வர் அரியணையில் ஏறினார் ஜெயலலிதா. அப்போது தமிழக சட்டப்பேரவையில் அதிகப்பட்சமாக 25 பெண் எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். 

1992 ஆம் ஆண்டு பெண் சிசுக்கொலையை தவிர்க்கும் வகையில் அவர் கொண்டுவந்த தொட்டில் குழந்தை திட்டம்; மகளிர் காவல் நிலையம், அம்மா உணவகம் போன்ற திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்று இன்றும் நடைமுறையில் உள்ளது. 

"தொட்டில் குழந்தை திட்டம் அறிமுகம்"
"மகளிர் மேம்பாட்டு திட்டங்களை கொண்டுவந்தார்"
"மகளிர் காவல் நிலையம், கமாண்டோ படை உருவாக்கம்"
"உள்ளாட்சி தேர்தலில் மகளிருக்கு 50 % இட ஒதுக்கீடு"


பின்னர் 1996 சட்டப்பேரவை தேர்தலில் அவரது தலைமையில் கட்சி தோல்வியை தழுவிய நிலையில் 2001-ல் ஆட்சியை கைப்பற்றியது. 

2006  சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை தழுவிய அதிமுக, 2011, 2016 தேர்தலில் அமோக வெற்றியை பெற்று தொடர்ச்சியாக 2 முறை எம்.ஜி.ஆர். வழியில் அதிமுகவை அரியணையில் ஏற்றிக் காட்டினார், ஜெயலலிதா... 
 
எம்.ஜி.ஆருக்கு பின்னர் பெரிய கட்சி என்ற அந்தஸ்துக்கு அதிமுகவை வலுப்படுத்தினார்.

"ராணுவ கட்டமைப்புடன் கட்சியை வழிநடத்தினார்"
"1.5 கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக்கினார்"
"உலகம் இருக்கும் வரையில் அவர்கள் புகழ் இருக்கும்"
"1000 ஆண்டுகளுக்கு அதிமுக தழைத்து வளரும்"


கடந்த 2016 ஆம் ஆண்டு அவரது மறைவையடுத்து இரண்டு அணிகளாக அதிமுக பிரிந்தது. 

பின்னர் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., இரட்டை தலைமையின் கீழ் அதிமுக வந்தது. 

ஜெயலலிதா இல்லாமல் இரட்டை தலைமையின் கீழ் சட்டமன்ற தேர்தலை சந்தித்த அதிமுக, ஆட்சியை இழந்து, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.

உள்ளாட்சி தேர்தல் தோல்வி, சசிகலாவின் அரசியல் பிரவேசம், இரட்டை தலைமை மீது எழும் தொடர் கேள்விகள் என பொன்விழா ஆண்டில் அந்த கட்சியில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை தமிழகம் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறது. 



Next Story

மேலும் செய்திகள்