13 வயது சிறுமி மரணத்தில் விலகியது மர்மம் - காதலித்த இளைஞரே கொன்று வீசியது அம்பலம்

மயிலாடுதுறை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 13 வயதான சிறுமி தன் காதலனால் கொடூரமாக கொல்லப்பட்டது ஒரு வாரத்திற்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்தது குறித்து இப்போது பார்க்கலாம்....
13 வயது சிறுமி மரணத்தில் விலகியது மர்மம் - காதலித்த இளைஞரே கொன்று வீசியது அம்பலம்
x
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 13 வயதான சிறுமி கடந்த 7 ஆம் தேதி அந்த பகுதியில் உள்ள வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டார். 9ஆம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமி, தன் மாமா வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச் சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது சிறுமியின் உடைகளில் ரத்தக்கறை இருந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதனிடையே இந்த சம்பவம் குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையும் நடந்து வந்தது. 
சிறுமியின் சடலத்தை வாய்க்காலில் இருந்து  பெற்றோர் எடுத்து வந்ததால் அங்கிருந்து எந்த தடயங்களும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. சிறுமியின் உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சிலரை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து ரகசியமாக கண்காணித்தனர். இதனிடையே மருத்துவ பரிசோதனை அறிக்கையின்படி சிறுமியின் மரணமானது கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் பல கட்ட விசாரணைக்கு பிறகு வில்லியநல்லூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகர் என்ற 25 வயதான இளைஞரை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசார் தன்னை பிடிக்க வருவதை அறிந்து அவர் தப்பி ஓட முயன்ற போதிலும் விடாமல் துரத்திச் சென்ற போலீசார், அவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பிரபாகரை பிடித்து விசாரித்த போது தான், சிறுமியின் மரணத்திற்கு பின்னால் இருந்த மர்மம் விலகியது. 13 வயதான அந்த சிறுமியை அவரின் உறவினரான பிரபாகர் கடந்த 3 மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இதனிடையே சிறுமி அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலரிடம் பேசி வருவது பிரபாகருக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பவத்தன்று சிறுமியை வரவைத்த பிரபாகர், அவரிடம் இளைஞர்களிடம் பழகாதே என எச்சரித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்து. ஒரு கட்டத்தில் கோபமடைந்த பிரபாகர், வேட்டியால் சிறுமியின் கழுத்தை நெறித்து வாய்க்காலில் தூக்கி வீசியுள்ளார். இதில் வாய்க்கால் நீரில் மூச்சு முட்டி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து வெளியேறிய பிரபாகர், உறவினர்களுடன் சேர்ந்து கொண்டு தானும் தேடுவது போலவே நாடகமாடி உள்ளார். பிரபாகரனின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்