பெற்ற தாய்க்கு கோவில் கட்டிய மகன் - "தந்தை இன்றி 13 பிள்ளைகளை வளர்த்தவர்"

13வதாக பிறந்த மகன், பெற்ற தாய்க்கு கோவில் கட்ட, பிள்ளைகள் பேரன் பேத்திகள் என 70க்கும் மேற்பட்டோர் இணைந்து வழிபாடு நடத்திய மெய்சிலிர்க்கும் சம்பவம் ஒன்று சென்னையில் அரங்கேறியுள்ளது.
பெற்ற தாய்க்கு கோவில் கட்டிய மகன் - தந்தை இன்றி 13 பிள்ளைகளை வளர்த்தவர்
x
குறிப்பிட்ட வயதிற்கு மேல் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடும் இந்த கலியுகத்தில், பெற்ற தாய்க்கு கோவில் கட்டி கும்பிடும் அளவிற்கு முத்து முத்தாக 13 அருந்தவப்புதல்வர்களை பெற்றெடுத்துள்ளார் அந்த தாய். அந்த தாயின் பெயர் சிவகலை... 13 குழந்தைகளை கொடுத்துவிட்டு, 40 ஆண்டுகளுக்கு முன் கணவர் ராமதாஸ் மரணமடையவே, மொத்த குடும்ப பொறுப்பும் சிவகலையின் தலை மீது விழ, அத்தனை பாரத்தையும் சுமந்தவள், தன் 12 வது பிள்ளையின் இறப்பை தாங்க முடியாமல் செத்து மடிந்துள்ளார். ஆம்.. சிவகலையின் இறப்பும் அத்தனை உணர்வுப்பூர்வமானதே... கடந்த ஆண்டு இதே நாள் சிவகலையின் 12 வது  மகன் கொரோனா நோயால் உயிரிழந்தார். இத்தனை ஆண்டுகள் தந்தை இல்லாமல் ஒவ்வொரு பிள்ளைகளையும் கட்டி காத்து வந்த அந்த தாயால், மகனின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை... தாய் சிவகலையும் மகன் இறந்த துக்கத்திலேயே உயிரை விடுகிறாள்.

இதனால் மொத்த குடும்பமும் சொல்ல முடியாத சோகத்தில் மூழ்கவே, 13 வதாக பிறந்த மகன் சரவண‌ன் தான், மொத்த குடும்பத்தையும் தேற்றும் முயற்சியில் இறங்கினார். அதன் விளைவே, இந்த கோவில். மகாபலிபுரத்தில் உள்ள சிற்ப கலைஞர் ஒருவரின் ஆறு மாத கால உழைப்பால் உருவாகியது சிவகலையின் சிலை. வீட்டின் முன்பக்கமே தாய்க்கு கோவில் கட்டி, அதில் தாய் சிவகலையின் சிலையை வைத்து பிரதிஷ்டை செய்து விழாவிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார் 13 வது மகன் சரவண‌ன். உறவினர்கள் ஒன்று சேர்ந்து, 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும், வேட்டி சேலைகளும் வழங்கினர்.

உணவுக்காக அங்கு காத்திருந்த பல முதியோர், தங்களை உணவுக்காக தவிக்க விட்ட பிள்ளைகளை எண்ணி கண்ணீர் விட்டபடி, இந்த குடும்பத்தை நினைத்தும் பூரிப்படைந்தனர். இது தவிர சிவகலையின் நினைவு நாளான இன்று பிள்ளைகள், பேரன், பேத்திகள் என 70க்கும் மேற்பட்டோர் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டனர். அப்போது அந்த தாயின் நினைவை எண்ணி சிலர் கண்ணீர் விட்டதையும் காணமுடிந்த‌து. இது போன்ற குடும்பத்திற்கு பெற்றோர் நிலைப்பதில்லை... பெற்றோர் நிலைக்கும் குடும்பங்களுக்கு அவர்களது அருமை புரிவதில்லை... உணவு அருந்திவிட்டு சென்ற மக்களின் வேதனை கலந்த வார்த்தைகளே இவை.

தந்தி தொலைக்காட்சி செய்திகளுக்காக திருவொற்றியூர் செய்தியாளர் ச‌சிதரன்...

Next Story

மேலும் செய்திகள்