மாநகராட்சியாக மாற்றப்பட்டு 2 ஆண்டுகள் : அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு - ஆவடி பொதுமக்கள் கோரிக்கை

மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட ஆவடியில் 2 ஆண்டுகள் நிறைவடைந்தும் அடிப்படை வசதிகள் கூட செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புகாருக்கான காரணம் என்ன? பார்க்கலாம்...
x
சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில், 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். 2019-இல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட ஆவடியில் இதுவரை சாலை, குடிநீர், கழிவு நீர் வெளியேற்றம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு. சேதமடைந்த சாலைகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், இதுகுறித்து பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திலுள்ள 14 மாநகராட்சிகளில், ஆவடி, திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, ஓசூர், வேலூர் ஆகிய 6 மாநகராட்சிகளில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அல்லது இணை இயக்குனர் அந்தஸ்தில் இருந்தவர்களே மாநகராட்சி ஆணையாளர்களாக தற்போது பணியில் உள்ளனர். இத்தகைய சூழலில், ஐ.ஏ.எஸ் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளை ஆணையர்களாக நியமிக்க வேண்டும் எனவும், அப்போதுதான் வளர்ச்சி திட்டங்கள் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் என்கிற கருத்தும் பொதுமக்களிடம் பரவலாக எழுந்திருக்கிறது.

அதேசமயம், நகராட்சி நிர்வாகத்தில் இருந்த அனுபவம் மிக்கவர்களை ஆணையாளராக நியமிக்கப்படுவது வழக்கமான செயல்முறைதான் எனவும், இதனால் நிர்வாக குறைபாடு ஏற்படாது எனவும் அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கின்றனர். எனினும், இதுபோன்ற இடைவெளிகளை போக்கி, மாநகராட்சியை மேம்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

Next Story

மேலும் செய்திகள்