கணவர் மீது கோபம் - குழந்தையை கொடூரமாக தாக்கும் தாய்

ஒரு பெண் தன் குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. யார் அந்த குழந்தை? குழந்தையை கொடூரமாக தாக்குவதன் காரணம் என்ன? விரிவாக பார்க்கலாம்…
கணவர் மீது கோபம் - குழந்தையை கொடூரமாக தாக்கும் தாய்
x
சனிக்கிழமை இரவு திடீரென இணையத்தில் பரவி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ காட்சிகள் தான் இவை. ஒரு குழந்தையை ஒரு பெண் கொடூரமாக தாக்கும் இந்த வீடியோ காட்சிகளை பார்த்த பலரும் கொதித்து போனார்கள். காரணம் அந்த குழந்தையை ரத்தம் சொட்ட சொட்ட அந்த பெண் அடிப்பதை அத்தனை எளிதாக யாரும் கடந்து செல்ல முடியாத அளவிற்கு குழந்தையின் அழுகுரல் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. இந்த குழந்தைக்கு நியாயம் கிடைக்கும் வரை வீடியோவை ஷேர் செய்யுங்கள் என வீடியோ பரவி வந்த நிலையில் உடனடியாக இது போலீசாரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் நடத்திய விசாரணையில் தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மணலப்பாடி மதுரா மோட்டூர் கிராமத்தை சேர்ந்த துளசி என்ற பெண் தான் அவர் என தெரியவந்தது. அந்த பெண்ணின் கையில் வதைபடும் அந்த குழந்தை அவரின் 2வது குழந்தை என்பதும் தெரியவந்தது. துளசியின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் சித்தூர். துளசியின் கணவர் வடிவழகன். இவர்களுக்கு 2016ல் திருமணம் நடந்துள்ளது. 2 குழந்தைகள். இதில் 2 வயது சிறுவன் தான் இந்த துன்பத்தை அனுபவித்த சிறுவன். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினைகள் வரும் போதெல்லாம் தன் 2 வயது மகனை அடித்து துன்புறுத்துவது துளசியின் வழக்கமாக இருந்துள்ளது. திருமணம் ஆனதில் இருந்தே துளசியின் நடவடிக்கைகளில் வித்தியாசம் இருந்ததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை அதிகம் இருந்துள்ளது. அப்போதெல்லாம் தன் செல்போனை எடுத்து கேமராவை ஆன் செய்து வைத்துக் கொண்டு குழந்தையை துன்புறுத்தி வீடியோ எடுத்து வைத்துக் கொள்வாராம்.

இப்போது பரவிக் கொண்டு வீடியோவில் இருக்கும் காட்சிகள் எல்லாம் கடந்த பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்டது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தையை கொடூரமாக தாக்கியதில் பாதிக்கப்பட்ட அந்த குழந்தை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளது, இந்த பிரச்சினையால் ஆத்திரமடைந்த வடிவழகன், தன் குழந்தைக்கு சிகிச்சை கொடுத்த கையோடு மனைவி துளசியை ஆந்திராவில் உள்ள அவரின் அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இப்போது குழந்தைகள் 2 பேரும் தந்தையின் பராமரிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

அடிக்கடி குழந்தையை துன்புறுத்தி காயம் ஏற்படும் போதெல்லாம் குழந்தையை கீழே விழுந்து காயம் ஏற்பட்டது என கூறி வந்துள்ளார் துளசி. ஆனால் அவர் இதுபோன்ற கொடூரத்தில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து வைத்திருந்ததெல்லாம் இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதிலும் கையை முறுக்கி விட்டுக் கொண்டு அந்த குழந்தையை அடிக்கும் காட்சிகள் பகீர் ரகம். என்னதான் பிரச்சினை என்றாலும் பெற்ற குழந்தையை ஒரு தாய் இப்படியும் வதைப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த நடந்ததாக சொல்லப்படும் நிலையில் இப்போது அந்த வீடியோக்கள் பரவ காரணம் என்ன? இந்த வீடியோவை வெளியிட்டது யார்? என அடுத்தடுத்த கேள்விகள் எழுகின்றன. 

 பெற்ற தாய் தான் என்றாலும் 2 வயது குழந்தைக்கு நடக்கும் இந்த கொடூரம் நிச்சயம் பலரின் மனங்களை உலுக்கி எடுக்கும் வகையில் உள்ளது. குழந்தையின் உடலில் உள்ள காயங்கள் இந்நேரம் ஆறியிருந்தாலும் கூட, அரவணைக்க வேண்டிய தாய், இதுபோன்ற ஆறா வடுவை ஏற்படுத்தியிருப்பது நிச்சயம் மனதளவில் அந்த குழந்தையை பாதித்திருக்கும்.

தந்தி டிவி செய்திகளுக்காக உளுந்தூர்பேட்டையில் இருந்து செய்தியாளர் ஸ்ரீபாலாஜி.

Next Story

மேலும் செய்திகள்