வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் - பல்வேறு கட்சிகள் தீர்மானத்திற்கு ஆதரவு

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...
x
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 385 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு நீக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்படுகிறது" என்றார்.
வேளாண்மைக்கு எதிரான இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதார விலை நீக்கப்படும் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், விவசாயம் முழுமையாக பெரும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் என கூறினார்.
வேளாண் துறையில் மாநில அரசுகளின் உரிமையை பறிக்கக்கூடியதாகவும் இச்சட்டங்கள் இருக்கிறது என அவர் தெரிவித்தார்.தமிழக அரசின் இந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பா.ம.க, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதனையடுத்து வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.தீர்மானம் குறித்து பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம், வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு பேசியதா என அறிய விரும்புவதாக கூறினார். மேலும், இதில் உள்ள பாதகங்களையும், விவசாயிகளின் கோரிக்கைகளையும் மத்திய அரசிடம் நேரடியாக கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர் கூறினார்.இதனையடுத்து தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.தமிழகத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாகவும் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்